இந்தியா, சீனா, பிரேசில், தென்னாபிரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கு இலங்கை அரசாங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
பிரிக்ஸ் (BRICS) அமைப்பு 2010 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதுடன், இந்த அமைப்பில் உறுப்பு நாடுகளின் சனத்தொகையானது உலக சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டதாகும். ஆரம்பத்தில் ஐந்து நாடுகளுடன் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டாலும் பின்னர் பல நாடுகள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
அமைப்பின் நாடுகள் தமக்கு இடையிலான பொருளாதார உறவுகளை பலப்படுத்தி வருவதுடன், இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தி வருகின்றன.
பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் ரஷ்யாவில் இடம்பெறவுள்ளது. இதன்போது பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்குரிய கோரிக்கையை இலங்கை முன்வைக்கவுள்ளது. இதற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பில் வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்,
”ரஷ்யாவில் பிரிக்ஸ் மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் ஜனாதிபதி பங்கேற்கமாட்டார். எனினும், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழு மாநாட்டில் பங்கேற்கும்.
இதன்போது பிரிக்ஸ் அமைப்பில் அங்கத்துவத்தை பெறுவதற்குரிய விண்ணப்பத்தை இலங்கை முன்வைக்கும். இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின்போது அங்கத்துவத்தை பெறுவதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சரின் ஆதரவைக் கோரினோம். பிரிக்ஸ் அமைப்பில் உள்ள ஏனைய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களிடமும் இந்த கோரிக்கை விடுக்கப்படும்.” என்றார்.
000
- 1667