Feed Item

காசிக்கு நிகரான ஆலயம் ஒன்று தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் உள்ளது. பெரியகுளத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தான் காசிக்கு நிகரான ஆலயம் ஆகும்.

இந்தியாவில் - தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனின் வாரிசான ராஜேந்திர சோழனால் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது பழமையான கோவில். எனவே இக்கோவிலுக்கு அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோவில் என்ற ஒரு பெயரும் உண்டு. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் தொல்லியல் துறையால் மிகச் சிறப்பாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இக்கோவிலின் இடது புறம் வற்றாத ஜீவநதியாகிய வராக நதி ஓடுகிறது. இந்த வராக நதியின் இரு புறத்திலும் ஒன்றை ஒன்று எதிர் எதிராக பார்த்த வண்ணம் ஆண் மருத மரம் ஒன்றும் பெண் மருத மரம் ஒன்றும் உள்ளது. அதனால் இக்கோவில் காசிக்கு நிகரான ஆலயமாக போற்றப்படுகிறது. மேலும் இக்கோவிலில் சரஸ்வதி, லட்சுமிக்கென தனித்தனியாக பூஜைகள் நடத்தப்படுகிறது. படைப்பு கடவுளான பிரம்மனுக்கு என்று தனியாக சன்னதி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. உயர்ந்த கோபுரத்தை தாங்கியுள்ள பழமையான இக்கோவில் பல்வேறு சிறப்புகளை பெற்றதாக உள்ளது. அதில் முக்கியமானது என்னவென்றால் 64 திருவிளையாடல்களில் ஒன்றான பன்றிக்கு பால் கொடுத்த படலம் என்கிற திருவிளையாடல் நடைபெற்ற இடம் இதுதான் என சொல்லப்படுகிறது. எனவே இத்திருத்தலம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திருத்தலமாக பார்க்கப்படுகிறது.

ராஜேந்திர சோழன் ஒருநாள் தனது படைகளுடன் இக்கோவில் அமைந்துள்ள காட்டுப்பகுதிக்கு வேட்டையாட வந்ததாகவும் அவ்வாறு வேட்டையாடும் போது தனது அம்பை எய்தி பன்றி ஒன்றைக் கொன்றதாகவும் கூறப்படுகிறது. இறந்து போன அந்தப் பன்றியானது சற்று நேரத்துக்கு முன்புதான் குட்டிகளை போட்டு தனது குட்டிகளுக்கு பால் கொடுத்து கொண்டிருந்ததாம். இதை சரியாக கவனிக்காத மன்னரின் செயலால் அம்பு துளைத்து பன்றியானது மரணத்தை தழுவவே, பசியோடு தவித்த அதன் குட்டிகளுக்கு முருகப்பெருமானே, பன்றித் தலையோடு வந்து பால் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனைப் பார்த்த ராஜேந்திர சோழன் தன் தவறை உணர்ந்து முருகப்பெருமானிடம் மன்னிப்பு கேட்டதோடு அந்த இடத்தில் முருகப்பெருமானுக்கு கோவில் ஒன்றை பிரமாண்டமாக எழுப்பியதாகவும் சொல்லப்படுகிறது. அதுதான் இந்த அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி கோவில்.

மேலும் இத்திருத்தலத்தில் அறம் வளர்த்த நாயகி வீற்றிருப்பதாகவும், சூரசம்ஹாரம் நடைபெறும்போதும், அதற்காக வேல் வாங்கும் போதும் அம்பாளிடமிருந்து வேலானது தானாக வந்து விடுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் இக்கோவிலில் சூரசம்காரம் நிகழ்வும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. மேலும் இங்கு அஷ்டமி மாத திருவாதிரை, சங்கடஹரா சதுர்த்தி போன்ற நாட்களில் எல்லாம் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. மேலும் இக்கோவிலில் நேத்தி கடன் செலுத்தும் பக்தர்களுக்கு திருமண தடை நீங்குவதாகவும், தீராத வயிற்று உபாதைகள் நீங்கி வளமுடன் வாழ்வதாகவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.

  • 1029