Feed Item
·
Added a news

பங்ளாதேஷின் இடைக்கால அரசாங்கம் வெளிநாடுகளில் உள்ள தனது தூதரகங்களில் மறுசீரமைப்பு செய்து வருகிறது.

அந்த வகையில், இந்தியாவுக்கான தூதுவர் உட்பட ஐந்து நாடுகளுக்கான தனது தூதர்களை மீட்டுக்கொண்டுள்ளது. இதனை அந்நாட்டு வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

தெற்காசிய நாடான பங்ளாதேஷில் ஏற்பட்ட அதிரடி அரசியல் மாற்றங்களால் அமைதிக்கான நோபெல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் தலைமையில் மாணவர்கள் ஆதரவுடனான இடைக்கால அரசாங்கம் ஆட்சி செய்து வருகிறது.

பங்ளாதேஷில் பல வாரங்களாக நீடித்த போராட்டங்களுக்குப் பிறகு ஷேக் ஹசீனா, கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி தனது பிரதமர் பதவியைத் துறந்துவிட்டு இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.

இந்நிலையில், பங்ளாதேஷ் அரசாங்கம் வெளிநாடுகளில் உள்ள தனது தூதரகங்களில் உள்ள உயர்மட்ட அதிகாரிகளை மாற்றியமைக்கும் பணியை முடுக்கிவிட்டுள்ளது.

அந்த வகையில், ஐந்து நாடுகளுக்கான தனது தூதுவர்களை உடனடியாக நாடு திரும்புமாறு பங்ளாதேஷ் வெளியுறவு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

அந்தத் தூதுவர்கள் நாடு திரும்பியதும் தங்களுடைய பொறுப்புகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

ஏற்கனவே, பிரிட்டனுக்கான பங்ளாதேஷ் தூதுவர் சைதா முனா தஸ்னீமை நாடு திரும்பும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து இப்போது ஐந்து தூதுவர்கள் நாடு திரும்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ஹசீனா ஆட்சியின்போது அவருடைய கொள்கைகளுக்கு எதிராக மாணவர்கள் தலைமையில் நாடு முழுவதும் போராட்டங்களும் வன்முறைச் சம்பவங்களும் தலைவிரித்தாடின. அதன் விளைவாக 700 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

000

  • 2366