சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்றிரவு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயிற்று வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் காலையில் அவருக்கு சில சிகிச்சைகள் செய்யப்படுவதாகவும் தகவல் வெளியானது. ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
ரஜினிகாந்த் 73 வயதிலும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவர் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.
நேற்றிரவு அவர் திடீரென அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயிற்று வலியால் அவர் அனுமதிக்கப்பட்டதாக முதலில் தகவல் வெளியானது. மேலும், காலையில் அவருக்கு முக்கிய மருத்துவச் சிகிச்சையும் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டது. அதன்படி அவருக்கு இன்று காலை முக்கியமான சிகிச்சை நடந்து முடிந்தது. நடிகர் ரஜினிகாந்துக்கு அடி வயிற்றுக்கு அருகில் ஸ்டெண்ட் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சிகிச்சை மிகத் துல்லியமாக நடந்து முடிந்ததாகவும் இப்போது ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சிகிச்சைக்குப் பிறகு ரஜினிகாந்த் தனது குடும்பத்தினரிடமும் பேசியதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
ரஜினியின் உடல்நிலை குறித்து இணையத்தில் பல்வேறு தகவல்கள் பரவின. இதற்கிடையே ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அவர் வழக்கமான மருத்துவ சோதனைக்காகவே மருத்துவமனை சென்றதாகவும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
- 1300