இந்தியாவுடன் சமீப காலமாக எதிர்ப்புப் போக்கைக் கடைப்பிடித்துக் கொண்டிருந்த மாலைதீவு அரசாங்கத்தின் நடவடிக்கையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மாலைதீவில் கருத்துத் தெரிவித்த இரண்டு பேர் பதவி விலகினர். இந்நிலையில் மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சு அரசுமுறைப் பயணமாக விரைவில் இந்தியா வரவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவுடன் முன்னர் நட்புப் பாராட்டிய நாடுகளில் மாலைதீவும் ஒன்று. இதனிடையே கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், சீனாவுக்கு நெருக்கமான முகமது மூயிஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார். அப்போது தொடக்கம் அவர் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினார். பதவியேற்ற குறுகிய காலத்திலேயே, அவர் மாலைதீவில் இருந்த இந்திய இராணுவப் படையை வெளியேற்றினார்.
அதேநேரம் அந்த நாட்டின் இரண்டு அமைச்சர்களான மரியம் ஷிவுனா, மல்ஷா ஷெரிப் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் சமூகவலைதளங்களில் கருத்துகளை முன்வைத்தனர்.
கடல்சார் கண்காணிப்புக்காக இந்திய இராணுவம் அதிநவீன ஹெலிெகாப்டர்கள், நவீன விமானம் உள்ளிட்டவற்றை மாலைதீவுக்கு வழங்கியிருந்தது. இந்தக் கருவிகளை இயக்குவதற்காக சுமார் 100 இந்திய இராணுவ வீரர்கள் மாலைதீவில் இருந்தனர். அவர்களை வெளியேற்றியதால், இந்தியா௲ மாலைதீவு இடையேயான உறவில் விரிசல் விழுந்தது. இந்திய இராணுவத்தை வெளியேற்றிவிட்டு, மாலைதீவு அரசாங்கம் சீனாவிடம் இராணுவ உதவி கேட்டு ஒப்பந்தமும் செய்யப்பட்டது.
இந்தியா-மாலைதீவு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.
நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு மாலைதீவு அதிபர் முகமது முய்சுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் பதவியேற்பு விழாவில் முகமது மூயிஸ் கலந்து கொண்டார். இதையடுத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த மாதம் மாலைதீவு சென்றிருந்தார். அப்போது முதலே மாற்றங்கள் ஏற்படத் தொடங்கி விட்டன.
அதன் தொடர்ச்சியாக மோடி குறித்து விமர்சித்த, இரண்டு அமைச்சர்கள் தங்களின் பதவியை இராஜினாமா செய்துள்ளனர். இதுவும் இருநாட்டு உறவை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று தகவல் வெளியானது. இந்நிலையில் மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சு, முதல்முறையாக அரசுமுறைப் பயணமாக விரைவில் இந்தியா வரவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
முகமது முய்சு, அடுத்த வாரமே டெல்லி வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாலைதீவில் பிரதமர் மோடிக்கு எதிராக விமர்சனம் செய்த அமைச்சர்கள் இருவரும் இராஜினாமா செய்த அதே நாளில், அந்த நாட்டு ஜனாதிபதி முகமது முய்சுவின் இந்தியப் பயணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்தியா௲ மாலைதீவு நாடுகள் இடையே மீண்டும் இணக்கமான சூழல் உருவாகியுள்ளது.
இது ஒருபுறமிருக்க, மாலைதீவுடன் இலகுவாக வர்த்தகம் செய்ய FTA எனப்படும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்கும் முயற்சிகளை இந்தியா தொடங்கியுள்ளதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான விரிசல் இப்போது படிப்படியாக நீங்கி வருவதாகத் தெரிகிறது. அதாவது மாலைதீவுடன் எளிமையாக வர்த்தகம் செய்வதற்கு ஏதுவாக FTA எனப்படும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்கும் முயற்சிகளை இந்தியா தொடங்கியுள்ளதாக மாலைதீவு அமைச்சர் முகமது சயீத் தெரிவித்துள்ளார்.
இதற்கான பேச்சுவார்த்தை இப்போது நடந்து வருகிறது.
இந்தியாவுடனான உறவு பாதிக்கப்பட்டதால் மாலைதீவின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்தமை குறிப்பிடத்தக்கது. மாலைதீவுக்குச் சுற்றுலா செல்வதைப் பல இந்தியர்கள் புறக்கணிக்க ஆரம்பித்தனர். இதனால் மாலைதீவு பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இதன் பின்னரே மாலைதீவு தனது போக்ைக மாற்றியது. சமீபத்தில் கூட அந்நாட்டின் அமைச்சர், “இந்தியர்கள் மாலைதீவுக்குச் சுற்றுலா வர வேண்டும்” என வெளிப்படையாகவே கேட்டுக் கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. இரு நாட்டு உறவு இப்படி இருக்கும் இந்த நேரத்தில்தான் மாலைதீவுடன் இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள முயற்சி மேற்கொள்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதேசமயம் சமீபத்தில் நடந்த மாலைதீவு சுதந்திரதின விழாவில் கலந்து கொண்டு பேசிய அந்நாட்டின் அதிபர் முய்சு இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் அவர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
மாலைதீவு இந்தியாவுக்கு அளிக்க வேண்டிய கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சில தளர்வுகளை இந்தியா அறிவித்துள்ள நிலையில், அதற்கு மாலைதீவு அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியா மாலைதீவு இடையே உறவுகள் வலுவாக இருக்கும் என்றும், இரு நாடுகளும் விரைவில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்றும் நம்பிக்கை இருப்பதாக முய்சு தெரிவித்துள்ளார்.
000
- 1468