கந்த சஷ்டி கவசத்தை தினமும் படிப்பதால் நம் உடலில் ஒருவித நேர்மறை ஆற்றல் பரவி, சுறுசுறுப்பு அதிகரிக்கும்,
அதானால் நம் செயல்பாடுகள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். படிப்போரையும், கேட்போரையும் பரவசப்படுத்தி, மன நிம்மதி தரும் பாடல் வரிகளை பாடியவர் தேவராய சுவாமிகள் என்பவராவார். கந்த சஷ்டி பாடல் உருவான கதை மிகவும் சுவாரஸ்யமானதாகும். வாருங்கள் அதைப்பற்றி தெரிந்துகொள்ளலாம்,
பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு தேவராயர் ஒருமுறை சென்றபோது மலையை சுற்றி கிரிவலம் வந்துள்ளார். அப்போது அங்கிருந்த மண்டபங்களில் பலரும் பலவிதமான நோய்களால் துன்புறுவதை கண்டு வருந்தியுள்ளார். அவர்கள் அனைவரும் நலமடைய வேண்டும் என மனதில் உறுதி எடுத்துகொண்ட தேவராயர் முருகரை பார்த்து உருகி வேண்டியுள்ளார்,
அன்றிரவு அவரது கனவில் தோன்றிய பழனி முருகர், "உன் எண்ணம் ஈடேற அருளினோம். பிணிகள் முதலான அனைத்து உபாதைகளும் நீங்கும். அதற்கு வழி உன்னிடம் உள்ளது. உலகில் உள்ளோர் அனைவரும் மந்திரமாக ஓதி இன்புற்று வாழ்வுறும் வகையில் செந்தமிழில் பாடு!'' என ஆசி வழங்கி மறைந்துள்ளார்,
பழனி ஆண்டவரை கண்ட தேவராயர் பரவசத்துடன், "அரஹரா போற்றி! அடியார்க்கு எளியாய் போற்றி! சண்முகா போற்றி! சரவணபவனே போற்றி!'' என ஆடிப்பாடி மகிழ்ந்தார்.
முருகன் திருவருளை வியந்து போற்றி பாடல் ஒன்றை உடனடியாக பாடி வழங்கினார். அதுவே 238 அடிகளைக் கொண்ட கந்தர் சஷ்டி கவசம் என்னும் புகழ்பெற்ற மந்திரம் ஆகும்.
யார் இந்த தேவராய சுவாமிகள்?
கந்தர் சஷ்டி கவசம் பாடிய தேவராய சுவாமிகள் தொண்டை மண்டலத்து வல்லூர் என்ற ஊரைச் சேர்ந்தவராவார். அவருடைய தந்தையார் கணக்கர் வேலை செய்த வீரசாமிப்பிள்ளை எனவும் இவர் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனவும் சில நூல்களில் குறிப்புகள் உள்ளன.
வீராசாமிக்கு நீண்ட நாட்களாகக் குழந்தை செல்வம் இல்லாமல் முருகன் திருவருளால் பிறந்தவரே தேவராயராவார்.
நன்கு கல்வி கற்று வியாபார நிமித்தமாக பெங்களூரு சென்று அங்கு தமது வணிகத் தொழிலை மேற்கொண்டார். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்ட தேவராயர் தாம் இயற்றிய கவிதைகளை மகாவித்வானிடம் காட்டி பிழை திருத்தம் செய்துகொள்வாராம்.
தணிகாசல மாலை, பஞ்சாக்ர தேசிகர் பதிகம், சேட மலை மாலை முதலிய நூல்களை தேவராயர் இயற்றியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கந்த சஷ்டி கவசம் பாடப்பட்ட ஊர்
தேவராய சுவாமிகள் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, திருவேரகம், குன்று தோறாடல், பழமுதிர்ச்சோலை ஆகிய ஆறு பதிகளுக்கும் தனித்தனியே ஆறு கவசம் பாடியுள்ளார் என அறிய முடிகிறது.
தற்போது அனைவராலும் பாடப்படும் கந்த சஷ்டி கவசம் திருச்செந்தூரில் பாடப்பட்டது எனக் கூறப்படுகிறது. ஆயினும் இக்கவசத்தின் நிறைவுப் பகுதியில் 'பழனி மலையின் மீது' கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சிறு குழந்தை வடிவாகிய முருகப் பெருமானது செம்மையான திருப்பாதங்களைப் போற்றுகின்றேன்' (பழனிக் குன்றினில் இருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி (225, 226) என்ற பாடல் வரியை அடிப்படையாக கொண்டு இக்கவசம் பழனியில் பாடப்பட்டது எனக் கூறப்படுகிறது.
கந்த சஷ்டி கவசம் எப்போது படிக்க வேண்டும்?
விரத நேரத்தில் கந்த சஷ்டி கவசத்தைத் தினமும் பாட வேண்டும். முருகனின் மந்திரங்களை பாராயணம் செய்தல், முருகனின் திருவிளையாடல் கதைகளைப் படித்தல் நன்மை பயக்கும்.
கந்தசஷ்டி கவசம் அருளும் பலன்கள்
முருகனின் பெயரால் நவகிரகங்களும் நமக்கு துணை நிற்பார்கள். எதிரிகளின் மனம் மாறி தோழமை உண்டாகும். வீட்டை பிடித்திருக்கும் தரித்திரம், பீடை, செய்வினைகள் அடியோடி அழிந்துவிடும். வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கி நேர்மறை சக்திகளான லட்சுமி கடாட்சம், குழந்தை பாக்கியம், மன நிம்மதி உண்டாகும்.
தினமும் கந்த சஷ்டி கவசத்தை பாடுவோருக்கு மதிப்பு, மரியாதை உண்டாகும். மனமும், உடலும் வலிமை அதிகரிப்பதோடு, முக வசீகரம் ஏற்படும்
முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமைகளில் மூன்று முறை கந்த சஷ்டி கவசத்தைப் படிப்பதால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
முருகனுக்கு உகந்த நாட்கள், சஷ்டி விரதம் மேற்கொள்ளும் தினத்திலும், முருகனுக்கு விரதம் இருந்து மூன்று முறை கந்த சஷ்டி கவசத்தைப் படிப்பதாலும், முருகனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் நடக்காது என்று நினைத்த காரியங்கள் கூட நிறைவேறும்.
- 1990