Feed Item
·
Added a news

வடக்கில் மாகாண சபையை வலுப்படுத்தி அதிகாரங்களை வழங்குவது தொடர்பாக தனது கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கியுள்ளதாகவும், மத்திய அரசாங்கத்திற்கு உதவும் வகையில் 09 மாகாண சிற்றரசுகளின் கீழ் அபிவிருத்தி வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற “ரணிலால் இயலும்” வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் தேசிய காணி ஆணைக்குழு மற்றும் உண்மை நல்லிணக்க ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும் எனவும் நவாஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைவாக எதிர்வரும் 05 வருடங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

''வடக்கின் விடயங்களை அரசியல் பிரச்சினைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது. அப்பிரதேசத்திற்கு அபிவிருத்தியும் அவசியம். இல்லையெனில் ஏனைய மாகாணங்கள் முன்னேறுகையில் வடக்கு பின்தங்கிவிடும் .வடக்கின் அபிவிருத்தியை போன்றே அரசியல் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பேன்.

முன்னாள் விவசாய அமைச்சர் அனுரகுமார எவ்வாறு தென்னிலங்கையில் மாகாண சபைகளுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தார் என்பதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இன்று யாழ்ப்பாணம் வந்து மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிய போதிலும் இந்த விடயங்கள் தொடர்பில் மக்களுக்கு உறுதிமொழி அளிக்க வேண்டும்“ எனவும் வலியுறுத்தினார்

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை வலுவாக தொடராவிட்டால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையக்கூடும் என சர்வதேச நாணய நிதியம் நேற்று விடுத்த எச்சரிக்கையை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டத்தைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என்றார்.

இன்னும் 03 வருடங்களுக்கு இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் எவராலும் உடைக்க முடியாது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி வடக்கை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டமொன்று வடக்கிற்கு அவசியம் எனவும் சஜித் பிரேமதாசவிடமோ அனுரகுமாரவிடமோ அதற்கான தீர்வு இல்லை" எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

  • 1962