Feed Item
·
Added a post

தம்மாதுண்டு பிளாஸ்டிக் இதெல்லாம் செய்யுமா? கார் கீ-க்கு இருக்கும் சீக்ரெட் பவர்கள்...

ஆட்டோமொபைல் துறையில் தற்போது தொழில்நுட்பம் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டது. இதன் காரணமாக கார் கீ ஃபாப்களும் (Key Fob) நவீனமயமாகி விட்டன. காரை அன்லாக் செய்வதற்கு மட்டும் கீ ஃபாப் பயன்படுகிறது என நினைத்து விட வேண்டாம். உருவத்தில் மிகவும் சிறியதாக இருக்கும் இந்த பிளாஸ்டிக் துண்டு, உங்களுக்கு பல்வேறு வழிகளில் உதவி செய்யும்.

கீ ஃபாப் என்பது சிறிய ரிமோட் டிவைஸ் ஆகும். கீலெஸ் சிஸ்டமை (Keyless System) கட்டுப்படுத்துவதற்கு இது உதவி செய்கிறது. கீ ஃபாப் இருப்பதால், நீங்கள் காருக்கு உள்ளே செல்வதற்கு உண்மையான சாவி தேவைப்படாது. உங்கள் காருடன் தொடர்பு கொள்வதற்கும், அதனை கட்டுப்படுத்துவதற்கும் ரேடியோ அலைவரிசைகளை (Radio Frequencies) கீ ஃபாப்கள் பயன்படுத்துகின்றன.

ஜன்னல்களை திறந்து, மூட:

தென்றல் உங்கள் மீது தவழ கார் கீ ஃபாப்பை பயன்படுத்த முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? காரின் அனைத்து ஜன்னல்களையும் கீ ஃபாப்பை பயன்படுத்தி ஒரே நேரத்தில் இறக்க முடியும். பல்வேறு கார்களின் கீ ஃபாப்களில் தற்போது இந்த வசதி வழங்கப்படுகிறது. கீ ஃபாப் மூலம் ஜன்னல்களை திறப்பது மட்டுமின்றி, மூடவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிப்புற சைடு வியூ மிரர்களை மடக்கி வைக்க:

வெளிப்புற சைடு வியூ மிரர்களை மடக்கி வைப்பதற்கும், மீண்டும் விரித்து கொள்வதற்கும் கூட உங்கள் கார் கீ ஃபாப்களை பயன்படுத்தி கொள்ள முடியும். நெருக்கமான இடங்களில் காரை பார்க்கிங் செய்யும்போது சைடு வியூ மிரர்களை மடக்கி வைப்பது அவசியம். இல்லாவிட்டால் மற்றவர்கள் அதனை சேதப்படுத்தி விடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

ஒரு சில கார்கள் ஆட்டோமேட்டிக்காகவே இதனை செய்து கொள்ளும். அதாவது காரை லாக் செய்யும்போது ஆட்டோமேட்டிக்காகவே வெளிப்புற சைடு வியூ மிரர்கள் மடங்கி கொள்ளும். இந்த வசதி இல்லாத கார்களில், கீ ஃபாப் மூலமாக வெளிப்புற சைடு வியூ மிரர்களை மடக்கி வைத்து கொள்ளலாம். இது மிகவும் பயனுள்ள வசதி என்பதில் சந்தேகமில்லை.

சன்ரூஃப்பை திறந்து, மூட:

இன்று பெரும்பாலான கார்களில் சன்ரூஃப் வசதி வழங்கப்படுகிறது. குறிப்பாக எஸ்யூவி கார்களில் அதிகளவில் சன்ரூஃப்களை காண முடிகிறது. வாடிக்கையாளர்களும் சன்ரூஃப் உள்ள கார்களை அதிகம் விரும்புகின்றனர். இந்த சன்ரூஃப்பை திறந்து, மூடுவதற்கும் கூட காரின் கீ ஃபாப்களை நீங்கள் பயன்படுத்தி கொள்ள முடியும்.

சீட் அட்ஜெஸ்மெண்ட் மெமரியை செட் செய்வதற்கு:

ஒரு சில கார்கள் சீட் மெமரியை செட் செய்து கொள்வதற்கும் கூட உங்களை அனுமதிக்கின்றன. ஒவ்வொரு கீ ஃபாப்பிற்கும் பிரத்யேகமான எண்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். எனவே நீங்கள் காருக்கு உள்ளே நுழைந்ததும், யார் காரை ஓட்டுகிறார்? என்பதை அது ஆட்டோமேட்டிக்காகவே தெரிந்து கொள்ளும். சீட் இந்த பொஷிஷனில் இருந்தால் கார் ஓட்ட சௌகரியமாக இருக்கும் என்பதை நீங்கள் முன் கூட்டியே செட் செய்து கொள்ளலாம்.

நீங்கள் காருக்கு உள்ளே நுழைந்தவுடன், காரின் ஓட்டுனர் இருக்கை நீங்கள் ஏற்கனவே செட் செய்து வைத்துள்ள பொஷிஷனுக்கு வந்து விடும். கீ ஃபாப் மூலமாக இதனை செய்வது உண்மையிலேயே மிகவும் சிறப்பான விஷயம். சீட் பொஷிஷன் சரியாக இருந்தால்தான், உங்களால் சௌகரியமாக கார் ஓட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே கூறியிருப்பது ஒரு சில வசதிகள் மட்டுமே. உங்கள் காரின் கீ ஃபாப் மூலமாக இன்னும் பல்வேறு வசதிகளை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் கீ ஃபாப்பில் என்னென்ன வசதிகளை பயன்படுத்தி கொள்ள முடியும் என்பதும், அந்த வசதிகளை எப்படி பயன்படுத்துவது? என்பதும் கார் உற்பத்தி நிறுவனங்களை பொறுத்து மாறுபடும்.

  • 1179