நான் மதுரைக்கு மக்களை பார்க்க போகிறேன். நீ மக்கள் என்னை வந்து பார்க்கும்படி செய்துவிடாதே என்று நகைச்சுவையாக கூறியுள்ளார் என்.எஸ்.கே.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்த என்.எஸ்.கிருஷ்ணன், தானம் மற்றும் தர்மம் செய்வதில் புகழ் பெற்றவர் என்றாலும் இந்திய சினிமாவில் யாரும் செய்யாத வகையில் தனது காரை ஓட்டிய டிரைவருக்கு விழா எடுத்துள்ளார்.
க்ளாசிக் சினிமாவில் சிறந்த காமெடி நடிகர் பாடகர் என்று தனக்கென தனி அடையாளத்தை பெற்றவர் என்.எஸ்.கிருஷ்ணன். 1908-ம் ஆண்டு நவம்பர் 29-ந் தேதி நாகர்கோவிலில் பிறந்த இவர், 1935-ம் ஆண்டு வெளியான மேனகா என்ற படத்தின் மூலம் திரைத்துறையிவல் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரின் அறிமுக திரைப்படமான சதிலீலாவதி படத்தில் நடித்திருந்தார்.
தனது நகைச்சுவை மூலம் சமூகத்திற்கு தேவையாக கருத்துக்களை வைத்து அசத்தியவர். கலைவாணர் என்ற பட்டத்துடன் வலம் வந்த என்.எஸ்.கிருஷ்ணன், நகைச்சுவை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்தாமல் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர். அதேபோல் சக நடிகர் நடிகைகளுடன் அன்பாகவும், நட்புடனும் பழகும் வழக்கத்தை வைத்திருந்த என்.எஸ்.கிருஷ்ணன், தமிழ் சினிமாவின் முக்கிய அடையாளமாக திகழ்ந்து வருகிறார்
தானம் மற்றும் தர்மங்கள் செய்வதில் முன்னணியில் இருந்து கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தனது கார் ஓட்டுனருக்கு விழா எடுத்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். என்.எஸ்.கே தனது வாழ்நாளின் இறுதிவரை தினகர்ராஜ் என்ற ஒருவரை மட்டும் தான் தனது கார் டிரைவராக பணியில் வைத்திருந்துள்ளார். ஒருமுறை மதுரைக்கு செல்லும்போது டிரைவர் தினகர் ராஜ் காரை வேகமாக ஓட்டியுள்ளார்.
இதை கவனித்த என்.எஸ்.கே, எப்பா ராஜ், நான் மதுரைக்கு மக்களை பார்க்க போகிறேன். நீ மக்கள் என்னை வந்து பார்க்கும்படி செய்துவிடாதே என்று கூறியுள்ளார். அதன்பிறகு தினகர் வேகத்தை குறைத்து காரை ஓட்டியுள்ளார். ஒருமுறை நாகர்கோவிலுக்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது நள்ளிரவில் திருச்சிக்கு அருகே சற்று நிற்கலாம் என்று எம்.எஸ்.கே. அவரது மனைவி மதுரம் ஆகியோர் இறங்கியுள்ளனர். அப்போது காற்றில், காரின் கதவு சாத்தியது போல் சத்தம் கேட்டதால் டிரைவர் ராஜ் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பியுள்ளார்.
இதனால் கோபமாகமான மதுரம், நாம் ஏறினோமா இல்லையா என்று கூட பார்க்காமல், இப்படி நடு ஜாமத்தில் விட்டுவிட்டு சென்றுவிட்டானே என்று சத்தம்போட பொறுமையாக இரு வந்துவிடுவான் என்று என்.எஸ்.கே சமாதானம் செய்துள்ளார். ஆனாலும் மதுரம் திட்டிக்கொண்டே இருக்க சிறிது நேரத்தில் ராஜ் காருடன் வந்து மன்னித்துவிடுங்கள் அய்யா என்று கூறியுள்ளார். அப்போது மதுரம் டிரைவரை பார்த்து திட்ட, என்.எஸ்.கே, அடுத்த மாதத்தில் இருந்து அவனுக்கு சம்பளத்தை உயர்ததி கொடு என்று கூறியுள்ளார்.
என்.எஸ்.கே இப்படி சொன்னதால் மேலும் கோபமான மதுரம், தப்பு பண்ணவனுக்கு எதுக்கு சம்பள உயர்வு என்று கேட்க, காரின் பின் இருக்கையில் கணவன் மனைவி இருக்கிறார்கள். அவர்கள் எதாவது பேசிக்கொண்டே வருவார்கள். நாம் பின்னால் எதற்காக திரும்பி பார்க்க வேண்டும். நமது டிரைவர் வேலையை பார்ப்போம் என்று நினைத்து தான் அவன், காற்றில் சாத்திய கதவை நாம் தான் கார் உள்ளே ஏறி சாத்தினோம் என்று நினத்துக்கொண்டு எடுத்து சென்றுவிட்டான் என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு மதுரம் கோபம் குறைந்து சாந்தமாக பேசியுள்ளார். இந்த தகவலை ஆலங்குடி வெள்ளைச்சாமி தனது வீடியோவில் கூறியுள்ளார்.
- 938