Feed Item

ஸ்ரீஹர தத்தர் என்பவர், வைஷ்ணவ குடும்பத்தில் பிறந்து, சிறந்த சிவபக்தராக விளங்கியவர். ஒருநாள், காவிரி கரையில் அமர்ந்து, தியானம் செய்து கொண்டிருந்தார் ஹரதத்தர்.

அந்த சமயம், ஒரு வேடனும், அவனது மனைவியும் பேசிக் கொண்டது, இவர் காதில் விழுந்தது. அவ்விருவரும் காவிரியை கடந்து, அக்கரைக்கு செல்ல வேண்டியவர்கள்.

ஆற்றில் தண்ணீர் குறைவாகவே இருந்ததால், ஆற்றில் இறங்கி நடந்தே, அக்கரை சேர்ந்து விடலாம் என்றாள் மனைவி. அதற்கு அவள் கணவன், அப்படி செய்யக் கூடாது. கங்கையை காட்டிலும், காவிரி புனிதமானது. அதனடியில் உள்ள ஒவ்வொரு மணலும், ஒவ்வொரு சிவலிங்கம் என்று பெரியோர் சொல்வர். நாம், கர்ம வசத்தால் இந்த குலத்தில் பிறந்துள்ளோம். கரையிலிருந்த படியே, ஒரு பாத்திரத்தில் ஜலத்தை எடுத்து, காவிரி ஸ்நானம் செய்து விடலாம்.

இந்த கர்ம சரீரத்துடன், காவிரியில் இறங்கி,சிவலிங்கங்களை மிதிக்க வேண்டாம். கொஞ்ச தூரம் சென்றால், மூங்கில் பாலம் வரும். அதன் வழியாக அக்கரை சேரலாம்... என்றான்.

அவனது பக்தியும், ஞானமும் ஹரதத்தரை கவர்ந்ததால், அவன் அருகில் சென்று, அவனை வணங்கி நின்றார்.

உடன் அவன் பதறிப் போய், சுவாமிகளே... நீங்கள், என்னை வணங்கலாமா, என்னை தொடலாமா, இதனால், எனக்கல்லவோ பாவம் வந்து சேரும்... என்றான்.

அதற்கு ஹரதத்தர், அய்யனே... உன்னை போல சிவபக்தியும், ஞானமும் கொண்ட எவரையும், நான் பார்த்ததில்லை. காவிரியின் மகிமையையும், அதிலுள்ள மணல்ஒவ்வொன்றையும் சிவலிங்கமாக கருதும் எண்ணம் கொண்டவர்கள், உன்னைத் தவிர வேறு யாரையும் நான்கண்டதில்லை.

வேத சாஸ்திரங்களில் கரை கண்டவர்கள் என்று சொல்லிக் கொள்வோரிடம் கூட, உன்னுடைய இந்த மனோபாவம்இருந்ததில்லை. நீயல்லவோ உண்மையில் சிவ தத்துவமறிந்தவன்... என்று புகழ்ந்து பாராட்டினர்.

இது, சிவலிங்கம்; இது கல்; இது மண்; என்ற பேதமின்றி, சர்வத்தையும் சிவமாக பாவிக்கும் எண்ணமே, சிறந்த சிவபக்திக்கு அடையாளம். இப்படிப்பட்ட எண்ணம் ல்லாருக்கும் வந்து விடுமா?

இதற்கு, மனம் பக்குவப்பட வேண்டும். பக்குவமில்லாத மனதில் பக்தி ஏற்படாது.எதிலும், பகவானை காணும் மனோபாவம் இருந்தால்,நாளடைவில், மனம் பக்குவப்படும்.

  • 1389