Feed Item
·
Added a news

ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன் முதல் காலாண்டுக்குள் மாகாண சபை தேர்தலை நடத்துவேன் என இன்றைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கூறிவருவது நடைமுறைச் சாத்தியமற்றதொன்று என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.  

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (11.06.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் –

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசியல் அதிகாரங்களுடன் இருந்தகாலத்தில் புதிய முறைமையிலான தேர்தல் சட்டம் கொண்டுவரப்பட்டு அது நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. ஆயினும் எல்லை நிர்ணயம் செய்வதில் ஏற்பட்ட இழுபறி காரணமாக அது நாடாளுமன்றில் நிறைவேற்றப்படவில்லை.  

பழைய முறைமையில் மாகாணசபைத் தேர்தல் நடத்துவதாக இருந்தால் ஏற்கனவே கொண்டுவரப்பட்ட சட்டமூலத்தை நீக்க வரைபுகள் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பித்து சாதாரண பெரும்பான்மை பலத்துடன் நீக்கப்பட்டு சட்டமாக்கப்பட வேண்டும் .அதன்பின்னரே பழைய முறைமையில் மாகாணசபை தேர்தலை நடத்தமுடியும்.

ஆனால் எதிர்க்கட்சி தலைவர் சஜித் கூறுவதுபோன்று அடுத்தவருட முதல் காலாண்டில் (மூன்று மாதங்களுக்குள்) தேர்தலை நடத்துவதென்பது நடைமுறைக்கு சாத்தியமா என்ற கேள்வி உள்ளது.

இது முழுக்க முழுக்க ஜனாதிபதி தேர்தலுக்கான ஒரு தேர்தல் வாக்குறுதியே தவிர நடைமுறைச் சாத்தியமற்றது என்பதே உண்மை. அத்துடன் வடக்கு கிழக்கு மக்கள் ரணில் விக்கரமசிங்கவுக்கு பெருவாரியாக தமது வாக்கை வழங்குவார்கள் என்பதை தெரிந்துகொண்ட சஜித் அவர்கள் நடைமுறை சாத்தியமற்ற வாக்குறுதிகளை அள்ளி விசியுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

  • 702