Feed Item
·
Added article

ஈரோட்டில் பிறந்த விநாயக சுந்தரவேல் என்பவர் தனது தந்தையின் பெயரான சிதம்பரம் என்பதன் முதலெழுத்தைச் சேர்த்து சுந்தர் சி ஆக தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருகிறார். சினிமாவில் உதவி இயக்குநராக வேலை பார்ப்பது என்பது எவ்வளவு கஷ்டம் என்று அதை உணர்ந்தவர்களுக்கே தெரியும்.

முதலில் ஒரு இயக்குநரிடம் உதவியாளராக வேலை பார்த்து பின்னர் கதை விவாதங்களில் பங்கெடுத்து அதன்பின் நடிகர் நடிகைகளுக்கு வசனங்கள் சொல்லிக் கொடுத்து என முழுப் படத்தையும் தங்கள் தோளின் மேல் சுமப்பார்கள். ஆனால் இவர்களுக்கு கிடைக்கும் சம்பளம் என்பது மிக சொற்பமே. ஷுட்டிங் நாட்களில் தினமும் கிடைக்கும் பேட்டா காசில் தான் வாழ்கையையே ஓட்டுவார்கள்.

அந்த வகையில் இயக்குநர் சுந்தர் சி வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சினிமா வாய்ப்புத் தேடி சென்னை வந்து பல இடங்களில் ஏறி இறங்கி இறுதியாக இயக்குநரும், நடிகருமான மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். அவரிடமிருந்து தொழில் கற்றுக் கொண்டு பின்னர் உள்ளத்தை அள்ளித்தா படத்தனை இயக்கி பிளாக் பஸ்டர் வெற்றியைக் கொடுத்து ரஜினி, கமல், அஜீத் என அனைத்து முன்னணி நடிகர்களையும் இயக்கினார்.

இவர் உதவி இயக்குநராக வேலை பார்த்த போது, ஒருமுறை பொள்ளாச்சி ஆனைமலைப் பகுதியில் சத்யராஜ் படம் ஒன்றின் ஷுட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது. காட்சிப்படி சத்யராஜ் வண்டி ஓட்டி வருவதை லோஆங்கிளில் படம் பிடிக்க வேண்டும். அதற்காக கேமராவை ரோட்டில் கீழே வைத்திருக்கின்றனர்.

அந்தப் படத்தின் இயக்குநர் சுந்தர் சியை அழைத்து ரோட்டில் சாணம் இருக்கிறது அகற்று என்று கூறியிருக்கிறார். சுந்தர்சியோ நான் போய் சாணியை அள்ளுவதா என்று யோசித்திருக்கிறார். உடனே கோபமடைந்த மணிவண்ணன் அவரைக் கெட்ட வார்த்தையில் திட்டி எடுடா என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் யோசிக்க மறுபடியும் கெட்ட வார்த்தையில் திட்டியிருக்கிறார்.

அப்போது அவர் திட்டியது அவருக்கு சினிமாவில் இயக்குநராக வந்துவிட்டால் எந்த வேலையையும் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்று உணர்த்தியதாம். உதவி இயக்குநராக இருந்து சினிமாவில் இயக்குநர் வாய்ப்பு கிடைக்கும் போது தான் அவர்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்திற்கும் பலன் கிடைத்தது போன்று இருக்கும் என்பது சினிமாவின் விதி.

  • 407