Feed Item
·
Added article

ஒரு பாடலை வாங்கி வருவதற்காக கண்ணதாசனிடம் அனுப்புகிறார் இயக்குநர். விசுவிற்கு மிகுந்த தயக்கம். இருந்தாலும் ‘நாடக உலகப்’புகழ் தந்த துணிச்சலில் சென்று விடுகிறார்.

கண்ணதாசன் வந்ததும், விசு உணர்ச்சிபூர்வமாக கதை சொல்லத் துவங்குகிறார். ஆனால் அதை சரியாக கவனிக்காமல், தன் வழக்கமான பாணியின்படி, பக்கத்தில் இருந்த பஞ்சு அருணாச்சலத்தை சீண்டி விளையாடிக் கொண்டு இருந்தார் கண்ணதாசன்.

விசுவிற்கு சங்கடமும் சற்று எரிச்சலும் கூட. ‘என்னய்யா.. இந்த ஆள் கதையை ஒழுங்கா கேட்க மாட்டேங்கறாரே.. என்னத்த எழுதப் போறார்?” ஆனால் விசு சொல்வதை நிறுத்தும் போது ‘தொடர்ந்து சொல்’ என்பது போல் கைகாட்டிக் கொண்டே இருக்கிறார் கண்ணதாசன்.

விசு சொல்லி முடித்ததும் கண்ணதாசன் தன் உதவியாளரை அழைத்து “எழுதிக்கப்பா’ என்று தன் வழக்கமான பாணியில் வசனம் போல சொல்லத் துவங்கி விடுகிறார்.

"குடும்பம் ஒரு கதம்பம்

பல வண்ணம் பல வண்ணம்

தினமும் மதி மயங்கும்

பல எண்ணம் பல எண்ணம்

தேவன் ஒரு பாதை

தேவி ஒரு பாதை

குழந்தை ஒரு பாதை

காலம் செய்யும் பெரும் லீலை..."

விசுவிற்கு ஒரே ஆச்சரியம். படத்தின் மையத்தை ஒரு சில வரிகளில் இத்தனை கச்சிதமாக கொண்டு வந்து விட்டாரே என்று. ஆனால் தான் சொல்லும் போது கவனிக்காதது போல் இருந்தாரே என்றும்..!

விஷயம் இங்கு முடியவில்லை. இந்த பாடலின் ஒரு வரியில் விசுவிற்கு ஒரு மறுப்பு தோன்றுகிறது. தைரியமாக கேட்டு விடுகிறார்.

கண்ணதாசன் அதற்கும் விளக்கம் சொல்கிறார். விசு சொல்லி வந்த கதையின் பகுதிகளை ஒவ்வொன்றாக பிய்த்து பொருத்தமாக மேற்கோள் காட்டி அந்த வரி எப்படி பொருந்துகிறது என்று விளக்கியவுடன் விசு அப்படியே பிரமித்து நின்றுவிட்டார்!

அவர் எழுதிய அந்த பாடல் "குடும்பம் ஒரு கதம்பம்" படத்திற்கே முதுகெலும்பு போல் அமைந்து, படத்தை வெற்றி பெற செய்தது. பாடலை விரைவாக கொடுத்த அவரின் வேகம் என்ன வியக்க வைத்தது என்றார் விசு.

இறந்து போனவர்களில் இருவரை காணும் வரம் கிடைத்தால் யாரை கேட்பீர்கள்? என்று விசுவிடம் கேட்கிறார்கள்.

ஒருவர் என் அப்பா. இன்னொருவர் ‘கண்ணதாசன்'......என்று சொல்லியிருக்கறார்.

  • 345