Feed Item
Added a news 

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் அலெர்ட் செய்துள்ளது. அக்னி நட்சத்திர காலத்திற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் வெப்ப அலை கடுமையாக வீசத் தொடங்கியுள்ளது. பகல் நேரத்தில் மக்கள் வெளியே சென்றால் முகம், உடல் எரியும் அளவுக்கு வெப்பம் தகித்து வருகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் வெப்ப அலை வீசுவதற்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கர்நாடகா, தெலுங்கானா, உத்தர பிரதேசம், கடலோர ஆந்திரா, மேற்கு வங்கம், சிக்கிம், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று முதல் வரும் 28 ஆம் தேதி வரை வெப்ப அலை வீச கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 டிகிரி செல்கியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை அதிகமாக இருக்கக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை இருக்கக்கூடும். இன்று வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் இன்று முதல் 28ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு 108 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தென் தமிழ்நாடு, வட தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

  • 365