Feed Item

கிளிநொச்சி மாவட்டம், பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் தடைப்பட்டுள்ள குடிநீர் விநியோகத் திட்டத்தை விரைந்து முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாக, நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்மைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் உறுதியளித்துள்ளார்.கடந்த 2023.03.22 ஆம் திகதி, புதன்கிழமை, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர்,அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களை அமைச்சு அலுவலகத்தில் நேரில் சந்தித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் இவ் உறுதிமொழியை வழங்கியுள்ளார்.கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கும் திட்டமானது, கிளிநொச்சி யாழ்ப்பாணம் நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நிறைவில் பளை பிரதேசத்தின் ஒன்பது கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன் பெறுவார்கள் என்பதோடு எதிர்காலத்தில் இத் திட்டத்தை விரிவாக்கம் செய்யவும் முடியும்.கடற்கரையை அண்டிய ஒடுங்கிய நிலப்பரப்பை கொண்ட பிரதேசமாக உள்ள பச்சிலைப்பள்ளியின் பெரும்பாலான கிராமங்களின் நிலத்தடி நீர் உவர் நீராகவே காணப்படுகிறது. இதனால் மக்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளுக்கான தீர்வாகவே இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.இதன் முதற்கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பளையில் அமைக்கப்பட்ட நீர்த்தாங்கியை கிளிநொச்சி நீர்த்தாங்கியுடன் இணைப்பதற்கான நீர்குழாய்கள் இன்மையால் இத் திட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.இதுபற்றி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்றதை அடுத்து, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவருக்கு உடனடியாகவே உரிய அறிவுறுத்தல்களை வழங்கிய அமைச்சர் ஜீவன் தொண்டமான், இத்திட்டத்தை விரைவாக நிறைவுசெய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.

  • 1574