ஒரு சோப்பு தயாரிக்கும் நிறுவனம் ஒன்றிற்கு, வாடிக்கையாளர்களிடம் இருந்து தொடர்ந்து ஒரு புகார் வந்துகொண்டே இருந்தது.
புகார் என்னவென்றால், சில சமயம் சோப்புகள் இல்லாமல் வெறும் கவர் மட்டுமே உள்ளது என்பதுதான்.
கம்பெனி நிர்வாகம் இதற்கு ஒரு தீர்வு காண முடிவுக்கு வந்து, நிர்வாகத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் அனைவரும் ஒரு அறையில் இணைந்து ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினர்.
நிர்வாகத்தின் முதல்வர், "சில சமயம் சோப்புகள் இல்லாமல் வெறும் காகிதம் மட்டும் இயந்திரத்தால் கவர் செய்யப்படுகிறது. இதற்கு ஒரு நல்ல தீர்வு கூறுங்கள்" என்று அங்குள்ள பொறுப்பாளர்களிடம் கூறினார்.
அதில் ஒருவர், "நாம் ஒவ்வொரு இயந்திரத்தின் பக்கத்திலும் ஒரு வேலையாளை நிறுத்த வேண்டும். அவர்கள் ஒவ்வொரு சோப்பாக பரிசோதித்து, பின் சோப்பு இல்லாமல் வரும் வெறும் காகிதத்தை தனியாக நீக்கிவிட வேண்டும்" என்று ஆலோசனைக் கூறினார்.
மற்றொருவர்,"நாம் அவர்களுக்கு அதற்காகவே தனி சம்பளம் கொடுக்க வேண்டியது இருக்கும். இது வேலைக்காகாது.
வேண்டுமென்றால் இவ்வாறு செய்யலாம், சோப்பின் எடையைக் கணக்கிடும் ஒரு இயந்திரத்தை, நம் இயந்திரங்களோடு இணைத்து விடுவோம். அது எடையைக் கணக்கிட்டு, எடையில்லாமல் வரும் வெறும் காகிதத்தை அகற்றிவிடும்" என்று கூறினார்.
அங்குள்ள அனைவரும் அவரின் ஆலோசனையைக் கேட்டு கைத்தட்டினர், முதல்வரை தவிர.
அவருக்கோ இவர்களின் யோசனை திருப்தி அளிக்கவில்லை.
அச்சமயம் அங்கு கதவு ஓரமாக நின்று கொண்டிருந்த ஒரு சிறுவன், இவர்களின் பேச்சைக் கண்டு சிரித்தான். அதனை கவனித்த முதல்வர் அவனை அழைத்தார்.
"தம்பி, ஏனப்பா இவர்களை பார்த்து சிரிக்கின்றாய்?!" என்று கேட்டார்.
அதற்கு அச்சிறுவன்,"நான் அவர்களை பார்த்து சிரிக்கவில்லை. உங்களை நினைத்துதான் சிரித்தேன்" என்றான்.
சிறிது குழப்பத்துடன் "அதற்கு என்ன காரணமென்று நான் தெரிஞ்சுக்கலாமா?" என்று முதல்வர் கேட்டார்.
"நீங்கள், இவர்களையெல்லாம் எப்படிதான் இந்த கம்பெனில உயர் பதவில வச்சிங்களோ... அத நினைச்சுதான் சிரிச்சேன்" என்று அச்சிறுவன் கூறினான்.
அங்கிருந்த அனைவருக்கும் அச்சிறுவன் மேல் கோபம் வந்தது, முதல்வரை தவிர.
"இங்க வேலை பாக்குறவங்களுக்கு டீ கொடுக்குற சின்ன பையன் நீ!...
நீ எங்கள பாத்து ஏளனமா பேசுற. இவன உடனே கம்பெனிய விட்டு வெளிய அனுப்புங்க சார்..." என்று அனைவரும் சத்தமிட ஆரம்பித்தனர்.
முதல்வர், அச்சிறுவனிடம் "ஏனப்பா அவ்வாறு கூறுகிறாய்?" என்று கேட்டார்.
"இவர்கள் இருவர் கூறி ஆலோசனையையும், அதற்கு இங்குள்ளவர்களின் கைத்தட்டலையும் பார்த்தேன். அதனால் தான் அவ்வாறு கூறினேன்" என்றான் அச்சிறுவன்.
அதை கேட்ட அனைவரும், "நீ! என்ன எங்களவிட பெரிய அறிவாளியா?..........
யோசனை சொல்லவந்துட்டான். போ போய் டீ கொடுக்குற வேலை மட்டும் பாரு" என்று அவனிடம் சத்தமிட்டனர்.
உடனே முதல்வர், "அனைவரும் அமைதியாக இருங்கள்.
தம்பி நீ சொல்ல வந்தத சொல்லுப்பா!" என்று கூறினார்.
"அந்த சோப்பு எல்லாம் கவர் பண்ணி வர்ற வழியில அதற்கு நேரா ஒரு ஃபேனை மட்டும் ஓடவிடுங்கள். சோப்பு இல்லாம வர்ற வெறும் கவர் மட்டும் காத்துக்கு பறந்து விடும். இதற்கு ஏன் தேவையற்ற வேலையாட்களையும், இயந்திரத்தையும் வீண் செலவு செய்து வைக்க வேண்டும்" என்று கூறினான்.
பின் அனைவரும் ஒன்றும் பேசவில்லை. முதல்வர் அவரை தட்டிக்கொடுத்து பாராட்டினார்.
அன்றைய தேதியிலிருந்து சரியாக எட்டு வருடங்கள் கழித்து, அங்கிருந்த பொறுப்பாளர்களும் மற்றும் அந்த சிறுவனும் ஒரு நாள் மீண்டும் அந்த கம்பெனியில் காலடி எடுத்து வைத்தனர்.
அதனை தனக்குரிய அறையில் இருந்து கவனித்த நிர்வாகத்தின் முதல்வர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சிறிது பதற்றம் அடைந்தார்.
காரணம்,
பொறுப்பாளர்கள் அனைவரும் நிர்வாக பொறுப்பாளர்களாகவே அந்த கம்பெனியினுள் நுழைந்தனர்.
அந்த சிறுவனோ, ஒரு மிகப் பெரிய கம்பெனியின் முதல்வரே எழுந்து வணங்கும் அளவிற்கு உயர்ந்தான்.
அச்சிறுவனின் பெயர் "கிங்மார்டின்".
- 760