நவம்பர் 10ம் தேதி 1659ம் வருடம் தரமான சம்பவம் ஒன்று மராத்திய மண்ணில் நடந்தேறியது.
மராத்திய சிங்கம் சிவாஜியின் வளர்ச்சியை தடுக்க, அடில் ஷா தனது தளபதியான அஃப்சல் கானை பீஜாப்பூரில் இருந்து 40,000 படை வீரர்களுடன் அனுப்பி வைக்கிறான்.
சிவாஜியிடம் படைபலமோ அதில் பாதிக்கும் குறைவு.
தேவையில்லாத உயிர் சேதத்தை தடுக்க, நாம் இருவரும் சந்தித்து பேசலாம் என்று அஃப்சல் கானுக்கு செய்தி அனுப்புகிறார் சிவாஜி.
அட, வந்த வேலை இவ்வளவு சுலபமா முடியுதே! என்று அப்சலுக்கு குதூகலம். ஏற்கனவே சிவாஜியின் அண்ணனான சம்பாஜியை ஸ்கெட்ச் போட்டு தூக்கியவன் தான் இந்த அப்சல்.
பிரதாப்கட் மலையடிவாரத்தில்
- ஒரு கூடாரத்தில் அப்சல் இருக்க, தலா பத்து மெய்காப்பாளர்கள் மட்டும் துணைக்கு வரலாம் என்ற விதியுடன் சிவாஜி கூடாரத்தினுள் நுழைகிறார்.அப்சல் கான் ஆறு அடி ஏழு அங்குலம் - ஆஜானுபாகுவான ஆள்.
- சிவாஜி ஐந்தடிக்கும் கம்மியான உயரம்.
எதிரே வந்த சிவாஜியை வரவேற்கும் விதமாக கட்டிப்புடி வைத்தியம் செய்ய அப்சல் குனிந்து, தனது நீள அங்கியினுள் மறைத்து வைத்திருந்த கட்டாரியை சிவாஜியின் முதுகில் பாய்ச்சினான்.
கட்டாரியின் கூர் முனை உடைந்தது தான் மிச்சம்.
இப்படி நடக்கும் என்று எதிர்பார்த்த சிவாஜி, உள்ளே இரும்பில் கவச உடை அணிந்திருந்தார்.
தனது கை விரல்களில் புலி நகங்களை போன்ற ஒரு ஆயுதத்தால் - (பாக்(Bagh) நாஹ்) அப்சலின் வயிற்றை பஞ்சராக்கி விட, நிலைகுலைந்த அப்சல் அலறியபடி கூடாரத்தை விட்டு வெளியே வந்து அங்கிருந்த பல்லக்கில் ஏறிக் கொண்டான்.
விரட்டி வந்த மராத்திய வீரர்கள் அவனது மெய்காப்பாளர்களை சிதறடித்து, அவனது தலையையும் கொய்து எடுத்து சென்றனர். அதற்கும் ஒரு காரணம் உண்டு.
சிவாஜியின் தாய் ஜீஜாபாய் தன் கணவரையும், முதல் மகனையும் கொடூரமாக சித்ரவதை செய்து கொன்றவனின் தலையை(ஆளை அல்ல) என் கண் முன் காட்டுவாயா சிவாஜி? என்று கேட்டிருந்தாராம்.
அதன்பின் வரிசையாக 23 கோட்டைகளை மராத்திய படை வென்று, அடில் ஷாவை அலற வைத்தனர்.