சிவப்பு மல்லி படத்திற்கு பிறகு விஜயகாந்த்துக்கு சத்யஜோதி பிலிம்ஸ் அட்வான்ஸ் கொடுக்கிறது. பிறகு அவர் நடித்த சில படங்கள் வரிசையாக சரியாக போகவில்லை.
வாய்ப்புகள் வரவில்லை. பணவரவு குறைகிறது. காருக்கு பெட்ரோல் போட பணமில்லை. அந்த நேரத்தில் சத்யஜோதி தந்த பத்தாயிரம் ரூபாயும் காலியாகிறது. திடீரென சத்யஜோதி தந்த பணமும் காலியாக, படங்களும் இல்லாமல் போக வாய்ப்புகளை தேடுகிறார் விஜயகாந்த்.
சத்யஜோதி தயாரித்து விஜய்காந்த் நடிக்க இருந்த 'நெருப்புக்குள் ஈரம்', படத்தில் விஜய்காந்த்தை தூக்கிவிட்டு தியாகராஜனை நாயகனாக்கியது சத்யஜோதி. விஜய்காந்த்துக்கு இருந்த ஒரே படமும் போனது. இந்த நிலையில் தந்த பத்தாயிரம் திருப்பிக்கேட்டு ஆளனுப்பியது சத்யஜோதி பிலிம்ஸ். "இப்போது படங்கள் இல்லை. கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்" என விஜய்காந்த் டைம் கேட்க நிறுவனம் சம்மதித்தது.
எஸ்.ஏ.சி விஜய்காந்த்தை வைத்து அவர் கன்னடத்தில் எடுத்த 'கெளுவு நன்னடே' படத்தை தமிழில் எடுக்க ஒப்பந்தம் செய்தார். 'வெற்றி நமதே' என்கிற அப்படத்தில் டைகர் பிரபாகர்-அம்பரீஷ் நடித்த அந்தப்படத்தில் விஜயகாந்த்துடன் மோகன் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் சில நாட்களில் மோகன் நடிக்க மாட்டேன் என விலகினார். அந்தப்படம் கிடப்பில் போடப்பட்டது. அந்த மோகனின் முன்னால் ஏ.ஐ தொழில்நுட்பத்தில் விஜய்காந்த் நடிப்பதாக GOAT படத்தில் காட்சி வந்தது காலம் செய்த மாயம். (இந்த ஜோடியின் நூறாவது நாள் சூப்பர்ஹிட்).
இந்த நேரத்தில் இயக்குனர் விசுவால் 'டௌரி கல்யாணம்' வாய்ப்பு கிடைக்கிறது. அந்த தயாரிப்பாளர் நேரே விஜயகாந்திடம் வந்து "எங்களுக்கு ஃபைனான்ஸியர் சத்யஜோதி பிலிம்ஸ் தான். உங்கள் சம்பளம் பத்தாயிரத்தை கழித்து விட்டு தருவதாக சொல்கிறார்கள்" எனச்சொல்ல விஜய்காந்தோ "எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ள வேண்டாம். ஐந்தாயிரத்தை எடுத்துக்கொள்ளச்சொல்லுங்கள்" என நெருக்கடிக்கு சம்மதிக்கிறார்.
எஸ்.ஏ.சி மோகன் விலகிவிட்டதால் தன் 'சாட்சி' படத்தை தொடங்குகிறார். பிரபு, கார்த்திக் சம்மதிக்காததால் விஜய்காந்திடம் வருகிறார் எஸ்.ஏ.சி. சாட்சி விஜய்காந்த்தை முன்னணி ஹீரோவாக்குகிறது.
பத்தாயிரம் ரூபாய்க்கு நெருக்கடி கொடுத்த சத்யஜோதிக்கு பின்னாளில் ஒரு வெற்றிப்படம் கொடுக்கிறார் விஜய்காந்த். அது ஹிட்டாகிறது. சத்யஜோதி அதற்கு முன் எடுத்த 'வேடன்', 'என்றும் அன்புடன்' ஓடவில்லை. பின் எடுத்த 'ஹரிச்சந்திரா'வும் ஓடவில்லை.
அந்தப்படம் தான் 'ஹானஸ்ட் ராஜ்'. விஜய்காந்தின் 'பத்துலட்ச ஹானஸ்ட்.'
