நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது கூலி, ஜெயிலர் 2 என இரண்டு பிரம்மாண்ட படங்கள் தயாராகி வருகின்றன. இதில் கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 14ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் ரஜினி கைவசம் உள்ள மற்றொரு திரைப்படமான ஜெயிலர் 2 ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். மேற்கண்ட இரண்டு திரைப்படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இந்த இரண்டு படங்களுக்கும் அனிருத் தான் இசையமைக்கிறார்.
சினிமாவில் பிசியாக உள்ள கமல்ஹாசன், அரசியலிலும் மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியின் தலைவராக உள்ளார். அக்கட்சி திமுக உடன் கூட்டணி அமைத்த பின்னர், அந்த கூட்டணியில் இருந்து நடிகர் கமல்ஹாசன் ராஜ்யசபா எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டார். விரைவில் எம்பி-ஆக பாராளுமன்றத்தில் அமர உள்ள நடிகர் கமல்ஹாசன், இன்று காலை தன்னுடைய நண்பர் ரஜினிகாந்தை போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்தார். எம் பி ஆக உள்ள கமல்ஹாசனுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த், அவருடன் சிறிது நேரம் உரையாடினார். இந்த சந்திப்பின் போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.