அம்மா உணவகத்தில் சாப்பாடு..அன்னையின் இறப்பு.. மரணத்திற்கு முன் நடிகர் அபிநய்
இறப்புக்கு முன் மன உளைச்சல் , பொருளாதார நெருக்கடி என பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்தார் மறைந்த நடிகர் அபிநய்
கடந்த சில வருடங்களாக கல்லீரல் பிரச்சனையால் சிகிச்சைப் பெற்றுவந்த நடிகர் அபிநய் உயிரிழந்துள்ள தகவல் தமிழ் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கஸ்தூரி ராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தை தொடர்ந்து ஜங்ஷன், சக்சஸ், சிங்கார சென்னை, தாஸ், பொன் மேகலை, தொடக்கம், சொல்ல சொல்ல இனிக்கும், பாலைவனச்சோலை, ஆறுமுகம், கார்த்திக் அனிதா, கதை, ஆரோகணம், என்றென்றும் புன்னகை, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஆகிய படங்களில் அபிநய் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் பிரபல பிஸ்கட் நிறுவன விளம்பரம் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.
கைகொடுக்காத சினிமா
தனுஷ் மற்றும் அபிநய் இருவரும் துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானவர்கள். இப்படம் வெளியானபோது அபிநய் தான் நாயகனாக நடித்திருக்க வேண்டும் தனுஷை ஏன் நடிக்க வைத்தார்கள் என பத்திரிகைகளில் கருத்துக்கள் வெளியாகின. அடுத்தடுத்து ஜங்ஷன் , சிங்கார சென்னை , பொன்மேகலை உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்தார் அபிநய். மலையாளத்திலும் சில படங்களில் நடித்தார். ஆனால் குறிப்பிட்டு சொல்லும்படியான வெற்றி அபிநய்க்கு கிடைக்கவில்லை. நடிப்பு தவிர்த்து பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல படங்களில் டப்பிங் பேசியுள்ளார். பிரபல வில்லன் நடிகர் வித்யூத் ஜமாலுக்கு துப்பாக்கி மற்றும் அஞ்சான் படங்களில் டப்பிங் பேசியுள்ளார்.
அம்மா உணவகத்தில் சாப்பாடு
பெரியளவில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு வந்ததாக அபிநய் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். சரியான கதைகளை தேர்வு செய்யாததால் தனது படங்கள் தொடர்ச்சியாக தோல்வியடைந்தன . இதனால் தனது சினிமா பாதை சறுக்கியது. அதே நேரத்தில் தனது அம்மாவின் இறப்பு தன்னை தனிப்பட்ட முறையில் மிகவும் பாதித்ததாகவும் அபிநய் தெரிவித்துள்ளார். இவற்றுடன் தனது பொருளாதார நெருக்கடியை சமளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த அபிநய்க்கு லிவர் ஸ்லெரோசிஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. சிகிச்சைக்காக என அபிநய் வாழ்க்கையில் தொடர் போராட்டங்களை சந்தித்து வந்துள்ளார்.
கல்லீரல் நோயுடன் போராட்டம்
அபிநயின் உடல் நிலை கவலைக்கிடமாக கிடப்பது ஊடகத்தில் பெரியளவில் பேசுபொருளானது. கல்லீரல் மாற்று சிகிச்சைக்கு ரு 27 லட்சம் தேவைப்படுவதாக அபிநய் தெரிவித்திருந்தார். ஒரு சில மட்டும் அவருக்கு பண உதவி செய்துவந்தனர். நடிகர் பாலா அபிநயின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ 1 லட்சம் வழங்கினார். அபிநய் குணமடைந்து அவர் மறுபடியும் ஆரோக்கியமாக திரும்புவார் என பலர் எதிர்பார்த்து வந்த நிலையில் அவரது இறப்பு பெரும் அதிர்ச்சியளித்துள்ளது. தமிழ் திரையுலகினர் நடிகர் அபிநயின் இறப்பு தங்கள் அஞ்சலியை தெரிவித்து வருகிறார்கள்.