Feed Item
·
Added article

ஓடும் ரயிலில் ஏற முடியாமல் விழுந்த நடிகை, உடனே கைகொடுத்த ராம்கி; காதலில் விழுந்த த்ரோபேக் சம்பவம்!

நடிகை நிரோஷாவை விபத்தில் இருந்து காப்பாற்றியது குறித்து நடிகர் ராம்கி மனம் திறந்துள்ளார்.

80-களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை நிரோஷா. சினிமா பின்புலத்தில் இருந்து வந்த நடிகை நிரோஷாவின் அப்பா, அக்கா, அண்ணன்கள் என அனைவரும் சினிமாவில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர்கள்.

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடிகை நிரோஷா நடித்துள்ளார். இவர் தற்போதும் தன்னுடைய நடிப்பை தொடர்ந்து வருகிறார். சில படங்களில் துணை கதாபாத்திரம் வேடத்திலும், சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

நடிகை நிரோஷா நடிகர் ராம்கியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். என்னதான் இவர்கள் நட்சத்திர ஜோடியாக இருந்தாலும் தொடக்கம் முதலே இவர்கள் இருவருக்கும் சினிமாவில் செட்டாகவில்லை என்று கூறப்படுகிறது.

அதாவது, நிரோஷா - ராம்கி இருவரும் நிறைய படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். ஆனால், பெரும்பாலும் படப்பிடிப்பு தளத்தில் இருவரும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்களாம். இப்படி இருந்த மோதல் தான் பின்னாளில் காதலாக உருவெடுத்துள்ளது.

’செந்தூரப்பூவே’ படப்பிடிப்பின் போது நடிகை நிரோஷா விபத்தில் சிக்கியுள்ளார். அப்போது நடிகர் ராம்கி தான் அவரை காப்பாற்றியுள்ளார். இதன்பிறகு இருவரும் நண்பர்களாகியுள்ளனர். பின்னர் அது காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், நடிகை நிரோஷாவை விபத்தில் இருந்து காப்பாற்றியது குறித்து நடிகர் ராம்கி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, "இயக்குநர் ஆபாவாணன் சாரோட படம் எப்போது பிரமாண்டமாக இருக்கும்.

ஒரு சண்டைக் காட்சி எடுத்துக் கொண்டிருந்தார். நான் ஓடுகிறேன், ரயில் ஓடுகிறது. அதாவது, நான் ஓடிபோய் ரயிலில் ஏற வேண்டும். அப்பறம் நிரோஷா ஏற வேண்டும். இதுதான் காட்சி. நிரோஷாவிற்கு ஓடி வர தெரியவில்லை.

ரயிலுக்கு இடையில் மாட்டிக் கொண்டார். அதன்பின்னர் நான் தான் அவரை பிடித்து காப்பாற்றினேன்” என்றார். நடிகர் ராம்கி, இரட்டை இயக்குநர்களான ராபர்ட் - ராஜசேகர் இயக்கிய 'சின்ன பூவே மெல்ல பேசு' திரைப்படம் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கினார்.

தொடர்ந்து, 'செந்தூர பூவே' , 'மருது பாண்டி' , 'இணைந்த கைகள்' போன்ற பல வெற்றிகரமான படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

ஒரு கட்டத்தில், சினிமா உலகில் இருந்து சிறிது காலம் விலகி இருந்த ராம்கி கடந்த 2013-ஆம் ஆண்டு 'மாசாணி' மற்றும் 'பிரியாணி' போன்ற படங்களில் துணை நடிகராக மீண்டும் நடிக்கத் தொடங்கினார். சமீபத்தில், 'லக்கி பாஸ்கர்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றார்.

  • 262