Feed Item
·
Added a post

பைத்தியக்காரன், பெண் பித்தன் என அழைக்கப்பட்டார்; சூனியம் வைத்து விட்டதாக அம்மா சொன்னார்;மனைவி, அம்மா பிரிந்து சென்றனர்;ஊரை விட்டு துரத்தப்பட்டார்.. மனம் தளராமல் கண்டு பிடித்தார் மலிவுவிலை நாப்கின்களை!

பெண்களுக்கான குறைந்த விலை சானிடரி நாப்கின் அடிமட்ட ஏழைப் பெண்களுக்கும் போய்ச்சேரும் அற்புதத்தை நிகழ்த்தியவர் கோவை முருகானந்தம்!

டைம்ஸ் இதழில் உலகின் தலைசிறந்த 100 மனிதர்களின் பட்டியலில் இடம் பிடித்தவர் இவர். 4 கோடி ரூபாயில் தயாரிக்கப்படும் நாப்கின் எந்திரத்தை வெறும் 45 ஆயிரம் ரூபாயில் தயாரித்து, முதல் எந்திரத்தை பீகார் மலைவாழ் மக்கள் வசிக்கும் மதுபனி கிராமத்திற்கு எடுத்துச் சென்றார்.

‌இரண்டாவது எந்திரத்தைத் தயாரித்து உத்தரகாண்ட் ருத்ரப்ரியா கிராமத்திற்கு

எடுத்துச் சென்றார். அம்மக்களின் பயன்பாட்டில் இது தன் வெற்றிகரமான

கண்டுபிடிப்பாக இருப்பதைக் கண்கூடாகக் காண்கிறார்.

அப்புறம் என்ன? ஏராளமான விருதுகள் இவரைத் தேடி வருகின்றன. நமது இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கிறது‌. இவர் வாழ்க்கை 'பேட்மேன்' என இந்தியில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. நடிகர் அட்சயகுமார் நடிக்க, இயக்கி, வெற்றிவாகை சூடுகிறார் இயக்குனர் ஆர்.பால்கி.

2018-இல் அமெரிக்க வாழ் ஈரான் பெண் ராக்யா செப்தாக்சி எடுத்த 'பீரியட் என்ட் ஆஃப் சென்டன்ஸ்' என்ற இவர் பற்றிய ஆவணப்படம் ஆஸ்கார் விருதைப் பெற்றது. இவ்வளவுக்கும் காரணமான முருகானந்தம் படித்ததோ 8-ஆம் வகுப்பு; ஆனால் இவர் பற்றிய பாடத்தை 12-ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று படித்து வருகின்றனர்!

ஆனால், அதற்கு இவர் கொடுத்த விலை.. அப்பப்பா! யாராலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவு மிகக் கொடுமையானது. அவருடைய வார்த்தைகளிலேயே அதைக் கேட்போம்...

"என் ஊர் பாப்பநாயக்கன்புதூர். அப்பா நெசவுத் தொழிலாளி. அம்மா விவசாயக் கூலி. எனக்கு ரெண்டு தங்கச்சிங்க. திடீர்னு ஒருநாள் அப்பா இறந்துட்டார். குடும்பமே இடிஞ்சு போயிடுச்சு. வீட்டின் வறுமையைப் போக்க கிரில் பட்டறை வேலைக்குப் போனேன். அங்க புதுசு, புதுசா நிறைய முயற்சி பண்ணினேன். அம்மா வாசல்ல போடுற கோலத்தை வீட்டு ஜன்னல் ஆக்கினேன். இதனால, என் முதலாளிக்கு என்னை ரொம்பப் பிடிச்சுப் போச்சு.

ஆனா, எனக்கு ஒரு தொழில்லயே ரொம்ப நாள் ஒட்டாது. நான் கிளம்புறேன்னு சொன்னப்ப முதலாளி, 'நீயே இந்த கடையை வாங்கிக்கோ’னு சொல்லி பணத்துக்கு வழிகாட்டினார். கடையை எடுத்து நல்லாவே நடத்தினேன். எனக்குக் கல்யாணமும் ஆச்சு. ஒருநாள் என் மனைவி எதையோ மறைச்சி எடுத்துட்டுப் போனாங்க. என்னனு கேட்டப்ப, 'இது பொம்பளைங்க சமாச்சாரம்’னு சொல்லிட்டு விறுவிறுனு ஓடப் பார்த்தாங்க.

நான் அவங்ககிட்ட இருந்து அதைப் பிடுங்கிப் பார்த்தா அழுக்கான துணி. 'ஏன் ஒரு நாப்கின் வாங்கக் கூடாதா?’னு மனைவியைத் திட்டினேன். அவங்களோ, 'அதுக்கு எல்லாம் செலவு பண்ணா குழந்தைக்குப் பால் வாங்க எங்க போவேன்’னு கேட்டாங்க. அதோட மட்டும் இல்லாம பெரும்பாலான கிராமப் பெண்கள் வசதி இல்லாததால இதுமாதிரி அழுக்குத் துணிகளைத்தான் பயன்படுத்துறாங்கனு அவங்க சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போயிட்டேன்.

அப்பதான் நாப்கினை நாமே தயாரிக்கலாமேனு எண்ணம் எழுந்துச்சு. கடையில ஒரு நாப்கினை வாங்கி, அதைப் பிரிச்சுப் பார்த்தேன். அதுல பஞ்சு மாதிரி ஒரு பொருள் இருந்துச்சு. உடனே பஞ்சை நல்லா அடைச்சு நாப்கின் தயாரிச்சேன்.

இதை யார்கிட்டே போய் சோதனை பண்ண முடியும். என் மனைவிகிட்ட போய் தயக்கமா நின்னேன். இப்படியே என்னோட சோதனைகள் தொடர்ந்தது. ஆனா, ஏகப்பட்ட ஏமாற்றம். ஒரு கட்டத்துல என் மனைவிக்கு என் மேல ரொம்ப கோபம்வந்து இந்த விஷயத்தை நிறுத்துங்கனு சொல்லி கண்டபடி திட்டிட்டாங்க. பிரிஞ்சும் போயிட்டாங்க.

வேற வழி இல்லாம நான் பக்கத்துல இருந்த மருத்துவக் கல்லூரி பெண்களிடம் என் ஆராய்ச்சியைச் சொல்லி உதவி கேட்டேன். பல பெண்கள் என்னைப் பைத்தியக்காரன் என்று திட்டினாங்க.வேறு சிலர் கல்லூரி வாசலில் நிற்பதை, கல்லூரி மாணவிகளைச் சுற்றி வந்ததைப் பார்த்து விட்டு பெண் பித்தன் என்றார்கள்.

கடைசியில் சிலர் ஒத்துழைப்புக் கொடுக்க முன்வந்தாங்க. சில வாரங்களில் அவங்களாலும் தொடர்ந்து ஒத்துழைக்க முடியலை. வேற வழி இல்லாம என்னையே சோதனைக்கு உள்ளாக்க முடிவு பண்ணினேன்.

என் நண்பரின் கறிக் கடையில் இருந்து ஆண்டின் சூடான ரத்தத்தை வாங்கிட்டு வந்து இடுப்பில் ஃபுட்பால் பிளாடரில் நிரப்பிக்கிட்டேன். நடுவில சின்னக் குழாய் மூலமா நாப்கினை நோக்கி இணைச்சுக்கிட்டேன். பிளாடரை அழுத்தினா ரத்தம் நாப்கினில் விழும். இந்த நாப்கினுக்காகப் பலவிதமான பஞ்சுகளை வெச்சுப் பரிசோதிச்சேன்.

இந்தச் சோதனையில் என் வேட்டி எல்லாம் ரத்தம் கொட்டியது. ஒரு மணி நேரத்தில் தாங்க முடியாத நாற்றம் வந்தது. இதைப் பார்த்து எனக்கு ஏதோ பால்வினை நோய் இருக்குனு ஊர்ல தகவல் பரவிடுச்சு. என் மனைவி கோவிச்சுக்கிட்டு என்னைவிட்டு நிரந்தரமாப் பிரிஞ்சுப்போயிட்டாங்க!

சோதனைக்காக என் பட்டறையில் இருந்த கடைசி ஸ்கிராப் வரைக்கும் வித்துட்டேன். ஆனாலும், எனக்கு நம்பிக்கை மட்டும் போகலை. சில பெண்கள் உபயோகப்படுத்தின நாப்கின்களைச் சேகரிச்சு, அதை வீட்டுல காயவெச்சு சோதனை செஞ்சேன். என் அம்மா இதைப் பார்த்து எனக்கு யாரோ சூனியம் வெச்சுட்டாங்கனு தனியா பிரிஞ்சு போயிட்டாங்க. ஊர்க்காரங்க எல்லாம் சேர்ந்து என்னை ஊரைவிட்டு விலக்கிவெச்சுட்டாங்க.

கண்ணீரோட நான் என் கிராமத்தை விட்டு கிளம்பினப்ப, என் கூடவந்த ஒரே ஜீவன் நான் வளர்த்த நாய் மட்டும்தான். அதோட கோவைக்கு கிளம்பி வந்து விட்டேன். அறை பிடிச்சுத் தங்கி வெறும் பிரெட் மட்டும் சாப்பிட்டு ஓயாம உழைச்சேன். அப்புறம்தான் வெளிநாட்டு கம்பெனிக்காரன் பயன்படுத்தறது ஃபைன் மரப் பஞ்சுனு தெரிஞ்சுது. அதைக்கொண்டு நாப்கின் தயாரிக்கிற இயந்திரம் எட்டுக் கோடி ரூபாய் ஆகும்னு சொன்னாங்க.

நான் ஃபைன் மரப் பஞ்சை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி பண்ணினேன். சுமார் ஆறு மாசம் ரெண்டு மணி நேரம் மட்டுமே தூங்கி, கஷ்டப்பட்டு ஒரு இயந்திரத்தைத் தயாரிச்சுட்டேன். இதுக்கு 45 ஆயிரம் செலவாச்சு. இயந்திரத்தைத் தயாரிச்சு முடிச்சப்ப என் கையில் ஒரு பைசா இல்லை.

சேமிப்பு, இருந்த சொச்ச சொத்து எல்லாத்தையும் இழந்துட்டேன். ஆனா, அதுல தயாரிச்ச ஒரு நாப்கினை ஒரு கல்லூரி பொண்ணு பயன்படுத்திட்டு, 'அண்ணா, இதை யூஸ் பண்ற மாதிரியே எனக்குத் தெரியலை. ரொம்ப வசதியா இருக்கு’னு சொன்னப்போ கதறி அழுதுட்டேன்.

அது என் பல ஆண்டுக் கனவு. அதுக்காக நான் என் வாழ்க்கையையே இழந்திருக்கேன். தகவல் பரவி நிறையப் பேர் இந்த இயந்திரத்தைத் தயாரிக்கச் சொல்லி ஆர்டர் கொடுத்தாங்க. நான் தயாரிச்ச இயந்திரம் மூலமாப் பெண்களே இப்ப சுலபமா நாப்கினைத் தயாரிக்க முடியும்.

ஒரு நாப்கின் விலை ஒரு ரூபாய்தான்! அவமானங்களை அனுபவித்திருந்தாலும் நம்மாலும் மனித குலத்திற்கு நல்லது செய்ய முடிந்ததே என இன்று பெருமிதம் அடைகிறேன்!" என்றார் பெருமூச்சு விட்டபடியே.

  • 27