Feed Item
·
Added a post

உங்கள் பயணம் உள்ளூர் மற்றும் அருகில் உள்ள நகரங்கள் மற்றும் இடங்கள் என்று வைத்துக்கொண்டால், இரவில் வீட்டிற்கு அல்லது தங்கும் இடத்திற்கு நீங்கள் அன்றிரவே வந்து விடுவீர்கள். எனவே, உங்களுக்கு தேவை - கையிருப்பில் ஓரளவு பணம்; அவசர தேவைக்கு ATM கார்டு, குடிக்க தண்ணீர் பாட்டில். ஹோட்டல்களில் உணவை முடித்துக்கொள்ளலாம். வீட்டு சாப்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்துபவர்கள், பாத்திரங்களில் உணவை எடுத்து செல்வதை விட, சாப்பிட்டு விட்டு, குப்பை பெட்டியில் போடுமாறு, காகித பொட்டலம் அல்லது கடைகளில் உணவுகளை பேக் செய்வதற்கு உள்ள பெட்டிகளை பயன்படுத்தலாம். இதன் மூலம் சுமை குறையும்.

நீங்கள் இரவில் வேறு இடங்களில் தங்குகிறீர்கள் - குறிப்பாக லாட்ஜுகளில் தங்குகிறீர்கள் என்றால், கண்டிப்பாக நீங்கள் ஒரு திட்டம் முதலில் தயார் செய்யவேண்டும். அதுவும், அதிக நாட்கள் தங்குகிறீர்கள் என்றால், அதற்கு தகுந்தவாறு உடைகளின் எண்ணிக்கை கூடும். இப்போது உங்கள் திட்டத்தில்(Checklist) இடம் பெறவேண்டிய பொருட்கள்:

- பல் துலக்க பிரஷ் மற்றும் பேஸ்ட் (சிறிய அளவு பேஸ்ட்) போதும். நீங்கள் தங்குகிற லாட்ஜுகளில் கிடைக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். சில சமயங்களில் இவற்றிற்காக, நீங்கள் வெளியிடங்களில் கிலோமீட்டர் தூரம் வரை நடக்கவேண்டியது வரும்.

- உடலை சுத்தம் செய்வதற்கு வேண்டிய சோப் - சிறிய அளவு போதுமானது; அதை வைப்பதற்கு சோப் கேஸ்.

- உடலை துவட்ட ஒரு துண்டு.

- தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கடைகளில் கிடைக்கும் சிறிய எண்ணெய் பாக்கெட்டுகள். அதாவது ஒரு முறை பயன்படுத்திவிட்டு, வெளியேற்றிவிடக்கூடிய பாக்கெட்டுகள்

- அதே மாதிரி ஷாம்பு பாக்கெட்டுகள். தேவைக்கு ஏற்றவாறு.

- முகத்திற்கு தேவையான பவுடர்; பெண்கள் கூடுதலாக அழகு சாதன பொருட்கள் - இவற்றை தனியாக ஒரு எடுத்துச்செல்லும் வகையில் உள்ள ஒரு பெட்டியில் வைத்துக்கொள்ளவும். கடைகளில் 30 ரூபாய்க்கு கூட இந்த துணி பெட்டிகள் கிடைக்கின்றன. இவற்றால் சுமை கூடாது. அதற்கு பதிலாக எடை கூடிய பெட்டிகள் என்றால், கார்களில் செல்பவர்களுக்கு மட்டுமே சரியாகும். பேருந்து, ரயில், விமானங்களில் செல்பவர்களுக்கு பொருந்தாது.

- உடைகள் - (வெளியூரில் தங்கும் நாட்களுக்கு தகுந்தவாறு) உள்ளாடைகள், சட்டைகள், பேண்ட்/வேஷ்டிகள் - அதே மாதிரி பெண்களும்.

- அறைகளில் ஓய்வாக இருக்கும் நேரத்தில் பயன்படுத்த தேவைப்படும் லுங்கிகள், நைட்டிகள் போன்றவை

- தேவையான கைக்குட்டைகள்

- ஆண்கள் என்றால், முகச்சவரம் செய்வதற்கு வேண்டிய சாதனங்கள் - shaving cream பிளேடுகள்/சிறிய கத்திரிக்கோல் உட்பட.

- தலை சீவுவதற்கு வேண்டிய சீப்புகள்

- பெண்கள் என்றால், தலைக்கு தேவையான கிளிப்புகள் போன்றவை

- ரயிலில் இரவில் படுக்கும்போது தேவைப்படும், சிறிய தலையணை (நம்முடைய லுங்கி போன்றவற்றை மடித்து கூட வைத்துக்கொள்ளலாம்), விரித்துக்கொள்ளவேண்டிய பெட்ஷீட்; போர்த்திக்கொள்ள போர்வை; குளிர் நேரம் என்றால், தலைக்கு குல்லா. ரயிலில் குளிர் சாதன வசதிகள் உள்ள பெட்டிகளில் பயணம் செய்யும்போது, இவற்றை குறைத்துக்கொள்ளலாம்.

- பெட்டிகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள தேவைப்படும் செயின் மற்றும் பூட்டு

- சிறிய நோட்டு புத்தகம் மற்றும் பேனா;

- தண்ணீர் பாட்டில்கள் - இவற்றை தங்கும் இடங்களில் கூட வாங்கிக்கொள்ளலாம்.

- வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள், தேவைப்படும் கதை புத்தகங்களை எடுத்து செல்லலாம்.

- மொபைல் போன் சார்ஜெர்

- ரயில்களில் உணவு உண்ணும்போது, இருக்கைகளின் மீது விரிக்க தேவைப்படும் பழைய தினபத்திரிகைகள்

- கைகளை சுத்தம் செய்வதற்கு தேவைப்படும் hand napkin

- மருந்துகள்/மாத்திரைகள் போன்றவை

- குழந்தைகள் என்றால், அவர்களுக்கு தேவைப்படும் இதர பொருட்கள்

- பெண்கள் என்றால், அவர்களுக்கு தேவைப்படும் இதர பொருட்கள்

- டார்ச் லைட்

- மெழுகுவர்த்தி வர்த்தி/தீப்பெட்டி

- பயன்படுத்திய உடைகளை தனியாக வைத்துக்கொள்ள தேவைப்படும் பைகள்

- வெளியூர்களில் இருந்து பொருட்களை வாங்கி கொண்டு வருவதற்கு தேவைப்படும் பெரிய அளவிலான பைகள்

- இவை தவிர வேறு தேவைப்படும் பொருட்கள்

பயணம் செய்வதற்கு முன்தினம், தனியாக ஒரு காகிதத்தில், இவற்றை குறித்துவைத்துக்கொள்ளவேண்டும்.

பிறகு பொருட்களை எடுத்து வைத்தால், பொருட்கள் விடுபடுவதற்கான வாய்ப்புகள் இருக்காது.

ஒன்றை நாம் கண்டிப்பாக புரிந்துகொள்ளவேண்டும்.

நாம் செல்லும் இடங்களில் இவை கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதங்கள் கிடையாது. நகரங்கள் மற்றும் பெரு நகரங்களில் வேண்டும் என்றால் தாராளமாக கிடைக்கலாம். குறிப்பாக ஊட்டி, கொடைக்கானல், நீலகிரி போன்ற மலை வாசஸ்தலங்களில் இவற்றை வாங்குவதற்கு அதிகம் மெனக்கெடவேண்டியது வரும். (என்னுடைய அனுபவத்தில் சொல்லுகிறேன்)

அதே மாதிரி பயணங்கள் முடிந்து லாட்ஜுகளில் உள்ள அறைகளை காலி செய்து விட்டு திரும்பும்போது, மறக்காமல், குறைந்த பட்சம் மூன்று நிமிடங்கள் செலவழித்து, அணைத்து இடங்களிலும் நம்முடைய பொருட்கள் உள்ளனவா என்று உறுதி செய்துகொள்ளவேண்டும்.

- குறிப்பாக பலர் அதிகம் தவறவிடுபவை இவைகளாக தான் இருக்கும் - மூக்கு கண்ணாடி; அதற்குண்டான பெட்டி ; கைக்கடிகாரம்; மோதிரம், சிறு சிறுகம்மல்கள் போன்றவை, மொபைல் சார்ஜெர், பர்ஸ்; பாஸ்போர்ட், டிக்கெட் இன்னும் பல.

- கைக்குட்டை/துண்டு/சோப்பு/ - போன்றவற்றை தவறவிடுவதால் அதிகம் இழப்பு இல்லை.

  • 43