Feed Item
·
Added a post

மரணித்து போன ஒருவன் தன் சவப்பெட்டியினுள் எழுந்து உட்கார்ந்து பார்க்க ஆசைப்பட்டான்.

கடவுள் அவன் காதினுள் சொன்னார் 'அப்படியே ஆகட்டும்'.. அவன் மெல்ல எழுந்து உட்கார்ந்தான் ஆனால் யாரும் அவனை அறியவில்லை.

அவனது தாயை நெருங்கி அமர்ந்தான். அவள் அழுது ஓய்ந்திருந்தாள்.. அருகில் இருந்த சின்ன மகளிடம் அடுத்த ஏற்பாடுகள் பற்றி கேட்டுக் கொண்டிருந்தாள். அவளைக் கடந்து தன் தந்தையின் முன் போய்நின்றான்.. அவர் கண்களில் கண்ணீரோடு சாய்ந்திருந்தார். அவர் அழுது பார்த்திராத அவனும் சேர்ந்தே அழுதான். ஆனால் யாருக்கும் கேட்கவில்லை.

ஜன்னலருகே அவன் மூத்த தமயன் எதையோ வெறித்தபடி நின்றிருக்க, அவன் பக்கம் போய் பார்த்தவனுக்கு அதிர்ச்சி.. அண்ணன் கண்ணிலும் கண்ணீர்த் துளிகள் காணச் சகியாமல் கலைந்து போனான்.

அடுத்த அறை வாசலில் தான் அவள் சரிந்து கிடந்தாள். அவள் தான் அவனது இல்லாள். இதயமே இழந்து விட்ட வலி அவள் கண்களில் ஒளியற்ற விழியில் வெறித்த பார்வையொன்றே மிஞ்சியிருந்தது.

அடுத்த படியாக அவனை பார்க்கிறான் 'ஓ.. அவன் அவனே தான் ஐந்து வருடங்களுக்கு முன்னால் அவனை விட்டு பிரிந்து போன அவனது நண்பன்' அவன் விழிகளில் விரக்தி அழுதழுதே அரண்டு போயிருந்தான்.

சுற்றம் சொந்தம் என எல்லோரும் திரண்டிருக்க இவனுக்கு ஏதோ உறைத்தது. இரண்டு வாரங்களுக்கு முன் அப்பாவிற்கு கண்ணாடி வாங்கவும், அம்மாவிற்கு அல்சர் மருந்து வாங்கவும் காசில்லை எனக் கடிந்து கொண்டது.

அண்ணியின் பிரசவத்திற்கு அண்ணன் கேட்ட பத்தாயிரம் ரூபாய்க்கு இவன் படுத்தி விட்ட பாடு படம் போல ஓடியது. மனைவிக்கு மல்லிகையும் அல்வாவும் வாங்கி கொடுத்தே வருடங்கள் ஆகிவிட்டது என்று நினைவிற்கு வந்தது. பள்ளிபருவத்திலே இருந்து ஒன்றாய் படித்தவனின் ஒற்றை வார்த்தையை நம்பாமல் போனதன் தார்பரியமும் நம்பியிருக்கலாம் என்ற தற்பரிதாபமும் வாட்டி வதைத்தது.

இருந்தும் என்ன பயன் எல்லாம் தான் முடிந்தாகிவிட்டதே. கடவுளின் குரல் மீண்டும் ஒலித்தது. 'இனி கிடைக்காதென்று நினைத்து வாழ வேண்டிய வாழ்க்கையை இது கிடைக்காதா என்று வாழ்ந்து வீணடித்து விட்டு வருந்தி என்ன பயன்... வந்து படு பெட்டியில்' என. இதோ நான் மீண்டும் படுத்திருக்கிறேன் என் சவப்பெட்டியில்

எல்லோரும் கூக்குரல் இட்டு அழுவது எனக்கு மட்டும் என் இரங்கலாக கேட்கவில்லை பெரும் இரைச்சலாக கேட்கிறது. நான் சேமித்த அந்த பணம் எனக்காக வருந்தவேயில்லை அது அடுத்த எசமானைத் தேடிக்கொண்டிருக்கிறது.

வாழும் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழாமல் இருக்கும் அனைவருக்கும் இக்கதை ஒரு பெரிய பாடமாகும். மாறுங்கள்... நிச்சயம் மாறிவிடுங்கள். பணம் அவசியம் தேவைதான். ஆனால், பணம், பணம் என வாழும் (வாழ வேண்டிய) வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே.

  • 57