சமீபத்தில் நடிகை ராதிகா, 'இயக்குநர் இமயம்' பாரதிராஜாவைச் சந்தித்து நலம் விசாரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் அவர் "தாய்க்கிழவி படம் பார்த்தீர்களா?" என்று சிரித்துக்கொண்டே கேட்கிறார். ஆனால், அந்த வீடியோவில் பாரதிராஜாவை அந்த நிலையில் பார்ப்பதற்கே மிகவும் மனதிற்குக் கஷ்டமாக இருக்கிறது.
வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனை உடையில் மிகவும் தளர்ந்த நிலையில் இருக்கும் ஒருவரை, அவர் தனிப்பட்ட முறையில் ஓய்வெடுக்கும் போது இப்படி வீடியோ எடுத்து வெளியிடுவது எந்த விதத்தில் நியாயம்? ஒரு காலத்தில் தமிழ் சினிமாவையே தன் கட்டளைக்குக் கீழ் வைத்திருந்த ஒரு மாபெரும் கலைஞனுக்கு, அவரது முதிர்ச்சியான காலத்தில் நாம் கொடுக்கும் மரியாதை இதுதானா?
நலம் விசாரிக்கச் செல்வது நல்ல விஷயம் தான். ஆனால், அதை ஏன் கேமரா வைத்து ரெக்கார்ட் செய்து ஊருக்கெல்லாம் காட்ட வேண்டும்?
பிரபலங்கள் தங்களின் தனிப்பட்ட பப்ளிசிட்டிக்காகவோ அல்லது சோஷியல் மீடியா லைக்குகளுக்காகவோ ஒருவரின் முதுமையையும், இயலாமையையும் இப்படிப் பொதுவெளியில் காட்சிப்படுத்துவது அப்பட்டமான உரிமை மீறல் இல்லையா? ஒரு நோயாளியின் தனிப்பட்ட சுதந்திரம் (Privacy) இங்கு எங்கே போனது?