Feed Item
·
Added article

பாலிவுட் நடிகையும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரணாவத், தன்னைச் சுற்றி எழும் விமர்சனங்களுக்கு அதிரடியாக பதிலளிப்பதில் பெயர் பெற்றவர். அரசியல், சினிமா என எந்த விவகாரமாக இருந்தாலும் தனது கருத்தை வெளிப்படையாக பதிவு செய்து வரும் கங்கனா, இந்த முறை யோகா குரு பாபா ராம்தேவை கடுமையாக விமர்சித்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த வார்த்தைப் போர் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற மாணவர் போராட்டங்களின் போது சில மாணவர்கள் பயன்படுத்திய அவதூறான வார்த்தைகள் குறித்து கங்கனா ரணாவத் கடுமையாக விமர்சித்திருந்தார். குறிப்பாக, அந்த மாணவர்களை "சாக்கடைத் தலைமுறை" என்று அவர் குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு பாபா ராம்தேவ் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கங்கனாவின் தகுதி, குழந்தைப் பருவம் மற்றும் இளமைப் பருவம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து பாபா ராம்தேவின் கருத்து கங்கனாவின் கவனத்திற்கு சென்ற நிலையில், அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் காட்டமாக பதிலளித்துள்ளார்.

என் இளமை, படுக்கையறை பற்றி கனவு காணாதீங்க: கங்கனா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பாபா ராம்தேவை குறிப்பிட்டு, "பாபாஜி, எனது இளமைப் பருவம் அல்லது படுக்கையறை குறித்து கனவு காணாதீர்கள். வெறும் வதந்திகள் மற்றும் கிசுகிசுக்களை வைத்து மட்டுமே ஒருவரால் இப்படி யூகிக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தொடர்பாக எழுந்த சர்ச்சையையும் சுட்டிக்காட்டிய கங்கனா, தனக்கு ஒழுக்கம் குறித்து பாடம் எடுக்க வேண்டாம் என்றும் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

"போலி மருத்துவ உரிமைகோரல்களுக்காக உச்ச நீதிமன்றத்தால் நான் ஒருபோதும் கண்டிக்கப்படவில்லை. இது உறுதியான ஆதாரங்கள் மற்றும் உண்மைகளின் அடிப்படையிலானது, வதந்திகளின் அடிப்படையில் அல்ல. எனவே எனக்கு ஒழுக்கத்தைப் பற்றி பாடம் நடத்த வேண்டாம். உங்களை விட எனது குணம் எவ்வளவோ மேலானது. இங்கு எந்த ஏமாற்று வேலையும் இல்லை" என்றும் கங்கனா தெரிவித்துள்ளார்.

முன்னதாக தனியார் செய்தி ஊடகத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் கங்கனாவின் "சாக்கடைத் தலைமுறை" என்ற கருத்து குறித்து பாபா ராம்தேவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அவருடைய தகுதி என்ன? அவரது குழந்தைப் பருவம் மற்றும் இளமைப் பருவம் எப்படி இருந்தது? அவரது முந்தைய செயல்கள் எப்படி இருந்தன? இதுபோன்ற நபர்களைப் பற்றி நான் பேச விரும்பவில்லை" என்று கூறியிருந்தார்.

நாட்டின் இளைஞர்களையும் ஜென்-இசட் தலைமுறையினரையும் சாக்கடை என்று அழைப்பது தவறானது என்றும் பாபா ராம்தேவ் தெரிவித்திருந்தார். "நாட்டின் இளைஞர்களையும், ஜென்-இசட் சமூகத்தினரையும் சாக்கடை என்று சொல்வது சீரழிந்த மனநிலையின் அடையாளம். இது தவறான விஷயம். கங்கனாவின் இந்த அறிக்கை குறித்து அவரது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறியிருந்தார்.

  • 12