விடாமுயற்சியால் விஸ்வரூப வெற்றியடையலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் நடிகர் சூரி தான். இவர் ஆரம்பத்தில் சினிமாவில் லைட் மேன் ஆக வேலை பார்த்து, பின்னர் தனக்கு கிடைத்த சின்ன சின்ன வேடங்களில் நடித்த இவர், சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படம் மூலம் காமெடியனாக களமிறங்கினார். அப்படத்தில் இவர் நடித்த பரோட்டா காமெடி அவரை பட்டி தொட்டியெங்கும் பாப்புலர் ஆக்கியது. அப்படத்திற்கு பின்னர் அவரை பரோட்டா சூரி என்றே அழைத்தனர். அந்த அளவுக்கு அவரின் கதாபாத்திரம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்தது. இதையடுத்து முன்னணி நாயகர்களின் படங்களில் காமெடி வேடத்தில் நடித்தார் சூரி.
தொடர்ச்சியாக காமெடி வேடங்களில் கலக்கி வந்த சூரியை, விடுதலை படம் மூலம் ஹீரோவாக நடிக்க வைத்தார் வெற்றிமாறன். அவரின் இந்த முயற்சியால் சூரியின் கெரியர் அப்படியே தலைகீழாக மாறியது. சூரிக்குள் இப்படி ஒரு திறமை வாய்ந்த நடிகர் இருக்கிறாரா என்பதை வெளிச்சம் போட்டு காட்டிய படம் விடுதலை. அப்படத்துக்கு பின்னர் அவருக்கு தொடர்ச்சியாக ஹீரோ வாய்ப்புகள் தான் வருகிறது. அதன்படி, அவர் நடித்த கருடன், மாமன் போன்ற படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாகி சூரியை பிசியான ஹீரோவாக மாற்றியது. அவர் கைவசம் தற்போது அரை டஜன் படங்கள் இருக்கிறது.
நடிகர் சூரி சினிமாவை தாண்டி பிசினஸிலும் கொடிகட்டிப் பறக்கிறார். அவர் சொந்தமாக அம்மன் ஹோட்டலை நடத்தி வருகிறார். மதுரையில் இந்த ஹோட்டலுக்கு ஏராளமான கிளைகள் உள்ளன. தரமான உணவுகளை வழங்கி வருவதால், அந்த ஹோட்டலுக்கு என தனி ரசிகர் கூட்டமே உண்டு. சூரியின் அம்மன் ஹோட்டலை அவருடைய உடன்பிறந்த சகோதரர்களும், உறவினர்களும் கவனித்துக் கொள்கிறார்கள். அம்மன் ஹோட்டல் மூலம் தற்போது கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறார் சூரி. நேற்று விநாயகர் சதுர்த்தி அன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய சூரி, ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டு உள்ளார்.
அதன்படி தன்னுடைய பிறந்தநாள் அன்று புது பிசினஸ் ஒன்றை தொடங்கி இருக்கிறார் சூரி. ஹோட்டலை தொடர்ந்து ஸ்வீட் கடை பிசினஸில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அம்மன் ஸ்வீட்ஸ் என்கிற பெயரில் புது பிசினஸை தொடங்கி இருக்கிறார். தரமான இனிப்பு வகைகள் மற்றும் கார வகைகள் உடன் கூடிய இந்த ஸ்வீட் கடை மதுரையில் தொடங்கப்பட்டு இருக்கிறது. அம்மன் உணவகங்களில் இந்த இனிப்பு வகைகள் அனைத்தும் கிடைக்கும் என கூறி இருக்கின்றனர். இதுவரை சாப்பாடு பிசினஸில் கலக்கி வந்த சூரி, இனி ஸ்வீட்டு கடையிலும் கோடி கோடியாய் அள்ள தயாராகி இருக்கிறார்.