திருப்பட்டூர் பிரம்மபுரீசுவரர் திருக்கோயிலில் பங்குனி மாதத்தில் 10 நாள்கள் பிரம்மோத்ஸவம் நடைபெறும். இதிலும் பங்குனி மாத பூரம் நட்சத்திரத்தன்று திருத்தேரோட்டம் நடைபெற்று, சுவாமி ரதவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். சித்திரை மாத முதல் தேதியான தமிழ் வருடப் பிறப்பன்று பஞ்சாங்கம் படித்தல் நிகழ்வு நடைபெறும். இதையொட்டி பிரம்மபுரீசுவரருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும். இதுபோல, ஆடிமாத பூரம் நட்சத்திரத்தன்று பிரம்ம சம்பத் கௌரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி மாதத்தில் நவராத்திரி, ஐப்பசி மாத பௌர்ணமியன்று பிரம்மபுரீசுவரருக்கு அன்னாபிஷேகம், கார்த்திகை மாத சோமவார திங்கள்கிழமைகளில் சங்காபிஷேகம் மற்றும் கார்த்திகை தீபத்திருவிழா, மாசி மாதத்தில் மகா சிவராத்திரி ஆகியவை வெகு விமரிசையாக நடத்தப்படும்.
பூஜைகள்
இக்கோயிலில் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. காலசாந்தி பூஜை காலை 8.30 மணி முதல் 9.30, உச்சிக்கால பூஜை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12, சாயரட்சை பூஜை மாலை 6 மணி முதல் 6.30, அர்த்தசாம பூஜை இரவு 7.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.
இக்கோயில் வார நாள்களில் காலை 7 மணி முதல் பிற்பகல் 12, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், வியாழக்கிழமைகளில் காலை 5.30 மணி முதல் பிற்பகல் 1, மாலை 4 மணி முதல் இரவு 8 வரை திறந்திருக்கும். வியாழக்கிழமைகளில் காலை 6 மணிக்கும், மற்ற நாள்களில் காலை 8 மணிக்கும் அபிஷேகம் நடைபெறும்.
அரங்கேற்றம்
சுந்தரருடன் சேரமான் கயிலாயம் சென்றபோது சிவனைப் பெண்ணாக உருவகப்படுத்தி சிற்றிலக்கியம் இயற்றினார். அதை சாஸ்தா அய்யனார் என்றழைக்கப்படும் மாசாத்தய்யனாரைக் கொண்டு இத்திருக்கோயிலில் அரங்கேற்றம் செய்தார் சிவபெருமான்.
அரங்கேற்ற அய்யனார்
பிரம்மபுரீசுவரர் திருக்கோயிலுக்குச் செல்வதற்கு முன்பு திருப்பட்டூரில் அய்யனாருக்கு மிகப்பெரிய கற்கோயில் அமைந்துள்ளது. ஞான உலா அரங்கேற்றிய அய்யனார் என்ற பெயரில் கையில் ஓலைச்சுவடியுடன் காட்சியளிக்கிறார்.
பல்வேறு காலகட்டத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பலர் இங்கு வந்து போரில் வெற்றி பெற வேண்டி, பின்னர் மாபெரும் வெற்றிகளைப் பெற்று அவர்களின் குலதெய்வமாக அய்யனாரை வணங்கியிருக்கின்றனர். இக்கிராமத்தின் காவல் தெய்வமாக பூர்ணபுஷ்கலாம்பிகா சமேத அரங்கேற்ற அய்யனார் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
வியாக்ரபாதர் புலிக்கால் முனிவர் ஜீவ சமாதி
திருப்பட்டூரில் காசி விசுவநாதர் சமேத விசாலாட்சி கோயிலில் வியாக்ரபாதர் ஜீவ சமாதி உள்ளது. சிவபெருமான் அருளால் வியாக்ரபாதர் காலால் அடித்துக்கொண்டு வரப்பட்ட கங்கைக்குளம் இன்றும் புலிக்கால்களைப் போல காட்சியளிக்கிறது.
எப்படிச் செல்வது?
திருப்பட்டூர் அருள்மிகு பிரம்மசம்பத் கௌரி உடனுறை பிரம்மபுரீசுவரர் திருக்கோயில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் பகுதியிலிருந்து செல்லும் வகையில் அமைந்துள்ளது. விமானம் மற்றும் ரயில் மூலமாக வருபவர்கள் திருச்சி வந்து சமயபுரம், சிறுகனூர் வழியாக இக்கோயிலைச் சென்றடையலாம்.