திமுக - மக்கள் நீதி மய்யம் கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில், நாளை மநீம தலைவர் கமல்ஹாசன் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு, செயற்குழு அவசரக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மநீம பொதுச் செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து கலந்தாலோசிக்க, மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், அணிகளின் மண்டல அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்களின் அவசரக் கூட்டம், தலைவர் கமல் ஹாசன் தலைமையில் நாளை 20.03.2026 (வெள்ளிக்கிழமை), மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கிறது.
சென்னை அண்ணாநகர் சாம்கோ ஹோட்டலில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள், அணிகளின் மண்டல அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.