Feed Item
·
Added a post

குளிர் காலத்தில் குளிரினாலோ.. இல்ல.. கோடையில் வேர்த்துச் சளிப் பிடித்தாலோ.. காற்றுக் காலத்தில் தூசிகளினால் சளிப் பிடித்தாலோ.. அதிகம் வேர்க்க வேர்க்க வேலை செய்வதால் ஏற்படும் சளியினாலோ - இப்படி எதுவாக இருந்தாலும்

இந்த மருந்துப் பொடி உங்களுக்கு மிகவும் உதவும். எந்தத் தட்பவெப்ப நிலைக்கும் இது ஒரு அருமையான மருந்து.

ஒன்றை மட்டும் எப்போதும் நினைவில் வைத்து கொள்ளுங்கள். எல்லா மருந்தும் எல்லோருக்கும் ஒத்துக் கொள்ளாது. அதை நன்றாக மனதில் வைத்து கொண்டு சிறிது செய்து சாப்பிட்டுப் பார்த்து ஒத்துக் கொண்டால் தொடர்ந்து சாப்பிடுங்கள்.......

தேவையான பொருட்கள் :

1.சுக்கு

2.அக்கரா

3.சித்தரத்தை

4.நறுக்குமூலம்

5.கருடக்கொடி

6.அதிமதுரம்

7.கிராம்பு

8.வால்மிளகு

இவை அனைத்தும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

சுக்கு, சித்தரத்தை, அதிமதுரம் - இவை எல்லாம் தடித்த வேர்கள். அவை பிளக்குமாறு தட்டிக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கனமான வாணலியை வைத்து, நன்கு சூடேற்றி, அடுப்பை சிம்மில் (Keep the gas stove in the sim position) வைத்துக் கொண்டு ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் போட்டு வறுத்துக் கொள்ளவும். (கை பொறுக்கும் சூடு போதும்) .

ஆறிய பின் மிக்ஸியில் போட்டு அரைத்து, சலித்து வைத்துக் கொள்ளவும்.

இதோடு

தூதுவளை,

வெற்றிலை,

ஆடாதோடை ,

நொச்சி ,

துளசி

இவற்றை ஒவ்வொரு கைப்பிடி எடுத்து நன்கு சுத்தம் செய்து,

நிழலில் உலர்த்திப் பொடித்து மேலே குறிப்பிட்டிருக்கும் மருந்துப் பொடியுடன் சேர்த்து நன்கு கலந்து கண்ணாடி பாட்டில் அல்லது எவர்சில்வர் டப்பாவில் வைத்துக் கொள்ளவும். Plastic containerகளைத் தவிர்க்கவும் .

காலை, மாலை - இருவேளை ஒரு ஸ்பூன் தேனில் கலந்து சாப்பிடவும்.

ஒரு கால் மணி நேரம் வேறெந்தப் பானமோ, உணவோ எடுத்துக் கொள்ளக் கூடாது.

மற்றபடி பத்தியம் ஏதும் கிடையாது. எப்பேர்ப்பட்ட சளியையும் அறுத்து வெளிக் கொணர்ந்து விடும்.

நிச்சயமாகப் பக்க மற்றும் பின் விளைவுகள் மிகவும் குறைவு என்பதை அனுபவபூர்வமாக அறுதியிட்டுக் கூற முடியும்.

சாப்பிடும் முறை மற்றும் அளவு:

இந்தப் பொடியைத் தேனில் கலந்து பெரியவர்கள் மட்டுமல்ல.. சின்னக் குழந்தைகளுக்கும் வயதுக்கு ஏற்றார் போல் தைரியமாகக் கொடுக்கலாம். குழந்தைகளுக்குக் கூடக் கொஞ்சம் தேன் கலந்து கொடுக்க வேண்டும்.

தேன் வீட்டில் இல்லை என்றால் அரை டம்ளர் தண்ணீரில் தேவையான அளவு பனைவெல்லம் அல்லது வெல்லம் போட்டு, அது கரைந்ததும் அரை டீஸ்பூன் மருந்துப் பொடியைச் சேர்க்கவும். அப்படியே பொங்கும்.. அடுப்பைத் தணித்து விடுங்கள் : மூன்று முறை பொங்கியதும் அடுப்பை அணைத்து விடுங்கள்.

சிறிது ஆறியதும் நன்றாக வாயில் எல்லாப் பக்கமும் படும்படி சுவைத்துக் குடிக்கவும் : விழுங்கும் போது தொண்டையில் நன்றாகப் படும்படி மெதுவாகக் குடிக்கவும்.

இந்த மருந்திற்குப் பத்தியம் ஏதும் கிடையாது. ஆனால் குடித்த பின் ஒரு அரைமணி நேரம் எதுவும் சாப்பிடாமல்.. குடிக்காமல் இருப்பது நல்ல பலனைக் கொடுக்கும்.

இதில் முக்கியமாக நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம். மீண்டும் சொல்கிறேன்.. எல்லாருக்கும் எல்லாம் ஒத்துக் கொள்ளும் என்று சொல்ல முடியாது. அதனால் பொதுவாக எந்த நாட்டு மருந்து எடுத்துக் கொண்டாலும் முதலில் சிறிது சாப்பிட்டுப் பார்த்து உங்கள் உடலுக்கு ஒத்துக் கொண்டால் தொடர்ந்து சாப்பிடலாம். இல்லை என்றால் சிறிது நாட்கள் கழித்து மீண்டும் சாப்பிட்டுப் பார்க்கலாம்.

எந்த மருந்தை எடுத்துக் கொண்டாலும் நம்பிக்கையோடு சாப்பிட வேண்டும்.. அது மிகவும் முக்கியம்.

தகவல் : இணையம்

  • 72