ராம் இயக்கத்தில், நிவின் பாலி, சூரி, அஞ்சலி என பலர் நடித்துள்ள திரைப்படம், ‘ஏழு கடல் ஏழு மலை’. வி ஹவுஸ் புரொடக் ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் எலியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. அக். 1-ல் வெளியாகும் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
நடிகர் சூரி பேசும்போது, “இயக்குநர்கள் வெற்றிமாறன், ராம், பாலா, மிஷ்கின் இவர்கள் படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. வெற்றிமாறன் அண்ணனிடம் வாய்ப்பு கிடைத்து அந்தப் படம் ஷூட்டிங்கை ஆரம்பித்து விட்டோம். அப்போது இயக்குநர் ராம் அண்ணன் அறிமுகமானார். ‘இந்த படத்தில் இப்படி ஒரு கதாபாத்திரம் இருக்கு, நீங்கள் பண்றீங்களா?’ என்று கேட்டார்.
எனக்கு ஆசையாக இருந்தாலும் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ‘ராம் அண்ணா ஏரியா கொஞ்சம் ரிஸ்க்கானது’ என்று சிலபேர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அங்கே போனதற்கு பிறகுதான் தெரிந்தது, இதைவிட சிறந்த இடம் இருக்க முடியாது என்று. முதல் நாள் படப்பிடிப்புக்கு அழைத்துச் சென்றார்கள். ஒரு பெரிய ரயில் செட், பஞ்சபூதங்களுமே அதை சுத்தி இருந்துச்சு. கூடவே 70 எலிகளும் இருந்துச்சு. அதுக்குள்ளதான் ஷூட்டிங். இதுல என்ன காமெடினா,
ராம் அண்ணன் எனக்கு டயலாக் சொல்லிக் கொடுத்த பிறகுதான் பேச ஆரம்பித்தேன். அப்போது என்ன சொன்னார் என்றால், ‘முதல் ஆக் ஷன், மழைக்கு, 2-வது ரயிலுக்கு, 3-வது விண்டோ காற்று வருவதற்கு; 4-வது, ட்ராலிக்கு; ஐந்தாவது... என்று சொல்லிக்கொண்டே இருந்தார். எனக்கு எப்போது ஆக் ஷன் வரும் என்று காத்திருந்தேன். ‘இதுதான் ஆர்டர். கரெக்ட்டா இருங்க’ என்று சொல்வார். 9-வது ஆக் ஷன், அது கூட எங்களுக்கு இல்லை. ஒன்பது எலிக்கு! 10-வது ஆக் ஷன், எங்களுக்கு. இப்படி படப்பிடிப்பு முழுவதுமே ஜாலியாகவும் புதிதாகவும் இருந்தது” என்றார்.