நடிகை கமலினி முகர்ஜி ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சினிமாவில் இருந்து விலகியிருந்தார். சமீபத்தில், ஒரு பாட்காஸ்டில், தான் சினிமாவில் இருந்து விலகியதற்கான காரணத்தை அவர் கூறி இருக்கிறார். அதன் படி ராம் சரண் மற்றும் காஜல் அகர்வால் நடித்த 'கோவிந்துடு அந்தரிவாடலே' படம் தான் சினிமாவில் இருந்து விலக முக்கிய காரணம் என கூறி இருக்கிறார். படப்பிடிப்பு அனுபவம் "அற்புதமாக" இருந்தபோதிலும், திரையில் தனது கதாபாத்திரம் இறுதியில் எவ்வாறு சித்தரிக்கப்பட்டது என்பதில் தனக்கு "வருத்தம்" ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
"படக்குழுவினரிடம் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. படப்பிடிப்புக் குழுவினர் அற்புதமான ஒத்துழைப்பையும் ஆதரவையும் அளித்தனர். ஆனால் என் கதாபாத்திரம் வெளிவந்த விதம் எனக்கு உடன்பாடில்லாததாக இருந்தது. எந்த சர்ச்சையும் இல்லை, சண்டையும் இல்லை. வருத்தமாக உணர்ந்ததால் சிறிது காலம் படங்களில் இருந்து விலகினேன்" என்று அவர் கூறினார்,
படப்பிடிப்பின்போது ஒரு காட்சி சிறப்பாகத் தெரிந்தாலும், சில நேரங்களில் அது இறுதிப் பதிப்பில் அதன் தாக்கத்தை இழக்கும் என்று அவர் விளக்கினார். "சில நேரங்களில் இது உங்கள் காட்சி என்று நீங்கள் நினைக்கிறீர்கள், அது சிறந்த விஷயமாகத் தோன்றும். ஆனால், திரையில் வரும்போது அது அப்படி இருக்காது.
பின்னர், நீங்கள் திரும்பிப் பார்க்கும்போது, நீங்கள் செய்த விதத்தில் அது வெளிவரவில்லை அல்லது அது ஏற்படுத்த வேண்டிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதை இயக்குநர் உணர்வார். அந்த விஷயங்கள் எங்களுக்குத் தெரியாது. நான் அனுபவித்த விதம் மிகவும் தனிப்பட்டது, அது எனக்கு வருத்தத்தை அளித்தது. அதனால்தான் தெலுங்குப் படங்களில் இருந்து விலகி, வேறு மொழிப் படங்களை முயற்சிக்க வேண்டும் என்று நினைத்தேன்" என்று அவர் கூறினார்.
இருப்பினும், இதுகுறித்து யாரிடமும் தனக்கு வெறுப்பு இல்லை என்று கமலினி முகர்ஜி தெரிவித்தார்.
இவர் தமிழில் கடந்த 2006-ம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். படத்தில் இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரியும் வேறலெவலில் ஒர்க் அவுட் ஆகி இருந்தது. குறிப்பாக அப்படத்தில் இடம்பெறும் பார்த்த முதல் நாளே பாடலில் அசத்தி இருப்பார்.