மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையாரின் மனைவி கௌரவதம்மாள், அவர் பட்டுக்கோட்டையாரோடு வாழ்ந்தது இரண்டே ஆண்டுகள். எனினும் அந்த நினைவுகளைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறார்.
“எனக்கு பட்டுக்கோட்டை பக்கத்துல ஆத்திக்கோட்டைதான் சொந்த ஊர். எங்க அண்ணன் சின்னையனும் ‘அவுக’ளோட அண்ணனும் சிங்கப்பூர்ல வேலை பார்க்கும்போது சிநேகிதமானவங்க. ‘எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா. அவளுக்கு கல்யாணம் பண்ணணும்னு எங்க அண்ணன்தான் சொல்லிருக்காக. அப்ப அவுக அண்ணன் ஒண்ணும் சொல்லலையாம். சிங்கப்பூர்லேர்ந்து லீவுல ஊருக்கு வரும்போது, தம்பியைக் கூட்டிட்டு என்னைப் பொண்ணு பார்க்க வந்துட்டார்.
அப்ப அவுக, ’அண்ணனுக்குதான் பொண்ணு பார்க்கப் போறோம்’னு நினைச்சுக்கிட்டு வந்தாகளாம். பொண்ணு பார்த்துட்டு ஊருக்குத் திரும்பும்போது, ‘பொண்ணு எப்படிடா இருக்கு’ன்னு அண்ணன் கேட்க, ’அழகாதான் இருக்கு’ன்னு இவுக சொல்லிருக்காக. ‘உனக்குத்தான்டா இந்தப் பொண்ணு’னு அண்ணன் சொன்னதும், இவுகளுக்கு ரொம்ப சந்தோஷமாப் போச்சாம். அப்போ வீட்டுல வந்து எழுதுனதுதான், ஆடை கட்டி வந்த நிலவோ, கண்ணில் மேடைகட்டி ஆடும் எழிலோ பாட்டு. இப்போ தெரிஞ்சுக்கோங்க நாந்தான் ஆடைகட்டி வந்த நிலவு” என்று மலர்ந்து சிரிக்கிறார் கௌரவம்மாள்.
“அவுகளோட இருபத்தேழாவது வயசுல எங்களுக்குக் கல்யாணம் நடந்துச்சு. தலைமை பாவேந்தர் பாரதிதாசன். கல்யாணத்தை முன்னுக்கு நின்னு நடத்துனது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவருடைய மனைவி ஜானகிக்குச் சொந்தமான வீடு, லாயிட்ஸ் ரோட்ல இப்பவும் இருக்கு. அங்கதான் எங்க கல்யாணம். யார் யாரோ பெரிய மனுஷங்கள்லாம் வந்திருந்தாங்க.
“அன்னைக்கு அவுக அண்ணன் பொஞ்சாதிக்கு வளைகாப்பு. அப்போ நான் கிண்டலா, ‘அக்காளுக்கு வளைகாப்பு. அத்தான் மொகத்துல பொன் சிரிப்பு’ன்னு சொன்னேன். இதை, ‘கல்யாணப் பரிசு’ படத்துல, அவுக பல்லவியா போட்டு பாட்டா எழுதிட்டாக. ‘இது நீ எழுதுன பாட்டு. இந்தா பிடி சன்மானம்’னு அந்தப் பாட்டு எழுதுனதுக்குக் கிடைச்ச பணத்தை என் கையில கொடுத்தாக.
அவுகளுக்குக் கோவமே வராது. எப்பவும் சிரிப்போட ஏதாவது ஒரு பாட்டை முணுமுணுத்துக்கிட்டே இருப்பாக. என்னைய அதிகமா வெளியில எங்கேயும் கூட்டிட்டுப் போனது கிடையாது. ஔவையார் பட ப்ரிவியூவுக்கும், அடையார்ல நடந்த ஒரு ஷூட்டிங்குக்கும்தான் நான் அவுககூட வெளியில போனேன். அவுக இன்னும் ரெண்டு வருஷம் என்கூட வாழ்ந்திருக்கக் கூடாதான்னு எனக்கு ஆயாசமா இருக்கு.!
- நன்றி : கல்கி