Feed Item
·
Added a post

வரவேற்பு (greetings)

கொரிய மக்கள் பொதுவாக 90° குனிந்து வணக்கம் தெரிவிப்பார்கள். ஆனால் நான் இங்கு கூற வந்தது கொரியாவில் நான் சந்தித்த ஈரான், துருக்கி மற்றும் ஜோர்டான் நாட்டு நண்பர்கள் பற்றி. கட்டியணைத்து கன்னத்தோடு கன்னம் மற்றும் முத்தம் வைத்து வரவேற்பது அவர்களின் வழக்கம். இதிலும் நாட்டைப் பொறுத்து முத்த எண்ணிக்கையிலும் வேறுபாடு உண்டு(2 அல்லது 3) . பெண் தோழிகளாக இருந்தாலும் முதலில் சற்று சங்கடமாக இருந்தது. இப்பொழுது சரியாகி விட்டது. அந்நாட்டு ஆண்களும் சக ஆண்களை இதே முறையில் தான் வரவேற்கிறார்கள். :D

உணவு உண்ணும் முறை

நாம் உணவைக் கையில் உண்ணும் பழக்கமுடையவர்கள். கொரியர்களோ chop stick எனப்படும் குச்சியால் உணவை உண்பார்கள். இங்கு கவனிக்க வேண்டியது. உணவை வீட்டில் உள்ள பெரியவர்கள் உண்ண ஆரம்பித்த பிறகே மற்றவர்கள் உண்ண வேண்டும். அவர்கள் உண்டு முடிக்கும் வரை அனைவரும் காத்திருக்க வேண்டும். மேலும் உணவுப் பாத்திரத்தை கையிலேந்தி சாப்பிடுவது கூடாது. பொது உணவினை உண்ணும் போது தனித் தேக்கரண்டி பயன்படுத்தாமல் அனைவரும் தங்கள் ஸ்பூனிலேயே எடுத்துச் சாப்பிடுவார்கள்(எனக்குப் பிடிக்காத ஒன்று!!).

காதல் வாழ்க்கை

இங்கு காதலர்கள் ஒளிந்து மறைந்து காதலிக்க வேண்டிய அவசியமில்லை. வெளிப்படையாக காதல் செய்யலாம். நம் ஊரில் இரட்டை பிறவியர் போன்று இங்கு காதலர்கள் உடை, காலணி , பை என பலவற்றை மாட்சிங்காக அணிவார்கள்.

மேலும் காதலித்து 22நாள், 100நாள்,200நாள் என பல நாட்களில் இனிப்பு, பரிசு வழங்கி கொண்டாடுவது இவர்களின் வழக்கம். இது மட்டுமல்லாமல் வருடம் முழுவதும் இங்குள்ள காதலர்களுக்குக் கொண்டாட்டம் தான்.

புதிய நண்பர்களை மேற்கொள்ளும் முறை

இது தான் நான் பார்த்தவற்றில் மிகவும் வித்தியாசமானது. நண்பர்களுடன் நெருக்கமாகவேண்டும் என்றால் இங்கு அவர்களுடன் சேர்ந்து விடிய விடிய மது அருந்துவார்கள். கொரிய கலாச்சாரத்தில் மதுவிறகு ஒரு முக்கிய இடம் உண்டு. இங்கு ஆண், பெண் என 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் குடும்பத்துடன் மது அருந்தலாம் . மற்றும் எந்த ஒரு பொது இடத்திலும் மது அருந்தலாம். சட்டமும் இதை அனுமதிக்கிறது.

சில சமயங்களில் மது அருந்தாதவர்களானாலும் இது போன்ற அழைப்புகளைத் தவிர்க்க முடியாது. ஏனெனில் இங்கு நம்மை விட வயதில் மூத்தவர்(பொதுவாக மேலதிகாரி, பேராசிரியர்) அழைத்தால் அவர் வார்த்தைக்கு மரியாதையை கொடுத்து கலந்து கொள்ள வேண்டும். ஆனால் நம்மை மது அருந்தச் சொல்லி கட்டாயம் செய்ய மாட்டார்கள். நானும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் கலந்து கொண்டதுண்டு. அதிகாலை வரை நீரும், கோலாவும் அருந்தி நேரத்தைக் கடத்தினேன்.

மேலும் ஆண்கள் சக ஆண் நண்பர்களுடன், பெண்கள் சக பெண் தோழிகளுடன் சீக்கிரம் நெருங்கிய நட்புக் கொள்ள, பொது குளியல் செய்யும் இடத்துக்கு சென்று ஒன்றாக குளிப்பது வழக்கம்.

  • 712