Feed Item
·
Added a post

1983ம் ஆண்டு!

ஏர் கனடா விமானம் 143 (Air Canada Flight 143) பயணிகளுடன் விண்ணில் பறந்து கொண்டிருக்கிறது!. ‌ ‌ அதுநாள் வரை பவுண்டு/மைல் எனப் பழங்கால அளவை முறைகளுடன் இயங்கி வந்த ஏர் கனடா, மெட்ரிக் முறைக்கு மாறி கிமி/லிட்டர் என மாறியது

ஆனால் பணியாளர்களுக்கு இதில் போதுமான பயிற்சியைக் கொடுக்கவில்லை. 23,000 கிலோ பெட்ரோலை விமானத்தில் நிரப்புவதற்குப் பதில் 23,000 பவுண்டு பெட்ரோலை நிரப்பியிருந்தனர். விமானத்தில் எரிபொருளைக் காட்டும் மீட்டர் பாதி எரிபொருள் இருப்பதாகக் காட்ட, அதில் ஏதோ பிரச்சனை என நினைத்த பைலட் விமானத்தைக் கிளப்பிக் கொண்டு பறந்தார்.

பாதிவழியில் 41,000 அடி உயரத்தில் இருக்கையில் பெட்ரோல் தீர்ந்து விட்டது. இரு எஞ்சின்களும் செயலிழந்து நின்று விட்டன. பூமிக்கு மேலே 41,000 அடி உயரத்தில் பெட்ரோல் தீர்ந்தால் எப்படி இருக்கும்?

வின்னிபெக் நகர கண்ட்ரோல் டவரை தொடர்பு கொண்டு "பெட்ரோல் தீர்ந்து விட்டது. என்ன செய்ய?" எனக் கேட்க அவர்களுக்கும் தெரியவில்லை. உலக வரலாற்றில் யாருமே இப்படி ஒரு சம்பவத்தைக் கேள்விப்பட்டதில்லை. இரு எஞ்சின்களும் செயலிழந்து நிற்கையில் விமானத்தை எப்படி இயக்குவது என எந்த பிளைட் மேன்யுவலும் இல்லை.

தவிர விமானத்தின் அனைத்துக் கருவிகளும் மின்சாரம் இல்லாமல் செயலிழந்து நின்றன. விமானத்தின் சக்கரத்தையும் எஞ்சின் உதவியின்றி திறக்க இயலாது...இத்தனைப் பிரச்சனைகளை சொல்லி "என்ன செய்ய?" எனக் கேட்டால் கண்ட்ரோல் டவரால் என்ன பதில் சொல்ல முடியும்?

"அப்படியே ஆள் இல்லாத இடமா பார்த்து விழுந்து செத்துப் போயிடுங்க" எனத் தான் சொல்ல முடியும். கண்ட்ரோல் டவரில் திகைத்து நின்றார்கள். அதன்பின் "பக்கத்தில் ஒரு கார் ரேஸ் மைதானம் இருக்கு. அதில் இறக்க முடியுமான்னு பாருங்க" என்றார்கள். சொல்லி விட்டு கார் ரேஸ் மைதானத்தைத் தொடர்பு கொண்டு "விமானம் வருது. மைதானத்தைக் காலி பண்ணுங்க" என சொல்ல முயன்றால் அன்று ஞாயிற்றுகிழமை. போனை யாரும் எடுக்கவில்லை.

பைலட் பியர்சன் இந்த சூழலில் நிதானமாக சிந்தித்தார். விமானத்தில் பெட்ரோல் இல்லை என்றால் அது கிளைடர் மாதிரி தான்.. பட்டத்தை காற்றில் பறக்க விடுவது போல் விமானத்தை மெதுவாக கிளைட் செய்து பறக்க வேண்டியது தான். ஆனால் இது பட்டமோ, கிளைடரோ அல்ல. போயிங் 767 ஜெட் விமானம்.

அதன்பின் விமானத்தை இரு கைகளையும் விரித்து பேலன்ஸ் செய்வது போல் வலப்பக்கமும், இடப்பக்கமும் ஆட்டி அதை ரேஸ் டிராக் நோக்கி ஓட்டிச் சென்றார். 20 கிமி தொலைவு பெட்ரோல் இல்லாமல் மெதுவாக விமானம் சென்று கொன்டிருந்தது

ரன்வே கண்ணில் பட்டது. அங்கே குழந்தைகள் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தார்கள். பார்ட்டி நடந்து கொண்டிருந்தது.

கிளைட் செய்து விமானத்தை ரன்வேயை நோக்கி கொண்டு வந்தார். மேன்யுவலாக சக்கரங்களை விடுவித்தார். சக்கரங்கள் லாக் ஆக மறுத்து ஊஞ்சல் மாதிரி ஆடிக்கொண்டு இருந்தன. விமானத்தைப் பக்கவாட்டில் ஒருக்களித்து இறக்க பின்சக்கரங்கள் ஒருவழியாகத் தரையைத் தொட்டன. முன்பக்க சக்கரம் தரையில் இறங்கவில்லை. விமானத்தின் மூக்கு தரையை உரசிக் கொண்டு இருந்தபடி விமானம் தரை இறங்கியது

குழந்தைகளும், கூட்டமும் சிதறி ஓட விமானம் லேண்ட் ஆகி, இழுக்கப்பட்டு சென்று நின்றது...கதவு திறந்து, எல்லாரும் சறுக்கியபடி வெளியே வந்தார்கள்.

கடைசி ஆளாக கேப்டன் பியர்சன் விமானத்தின் படியில் நின்றார். "எல்லாரும் இறங்கியாச்சா" என உறுதி செய்தபடி கடைசி ஆளாக சறுக்கியபடி கீழே இறங்கினார்.

பயணிகள் அவரை ஹீரோ மாதிரி ஆரவாரத்துடன் சூழந்தார்கள். ஒருவருக்கும் உயிர்சேதம் இல்லை.

இப்படி பெட்ரோல் இல்லாத விமானத்தை 41,000 அடி உயரத்தில் இருந்து கிளைடர் மாதிரி ஓட்டி, பக்கவாட்டில் இறக்க முடியும் என்பதை அன்று தான் உலகம் அறிந்தது..

எப்பேர்ப்பட்ட உயிரே போகும் பிரச்சனை என்றாலும் அதற்கு நிதானமாக சிந்தித்தால் இப்படி ஒரு வித்தியாசமான தீர்வு கிடைக்கும்.

  • 497