நடிகர் எஸ்.வி.சுப்பையா அண்ணன் - நடிகர், தயாரிப்பாளர் மிகவும் வித்யாசமானவர்.
திடும் என்று படப்பிடிப்பு சமயத்தில் எல்லோரும் சாப்பிட்ட அத்தனை எச்சில் இலைகளையும் கண்மூடித்திறப்பதற்குள் எடுத்துப்போய் குப்பைத்தொட்டியில் போட்டுவிடுவார். ஏன் என்று கேட்டால், 'தான்' என்ற அகந்தை ஒழிய இப்படிச் செய்வதாகச் சொல்வார்.
பாரதியாகவும், அபிராமப் பட்டராகவும் திரையில் வாழ்ந்த அவர் ஜெயகாந்தனின் 'கைவிலங்கு' - நாவலைத் தனது முதல் படமாக தயாரித்தார்.
நானும் லட்சுமியும் இணைந்து நடித்த 2- வது படத்தில், சிவாஜி அவர்கள் சாமுண்டி கிராமணி - என்ற கள் இறக்கும் தொழிலாளியாக 3 நாட்கள் கௌரவ வேடத்தில் நடித்துக் கொடுத்தார்.
அந்த வேடம் படத்தின் முதுகெலும்பாக அமைந்து விட்டது. வெள்ளிப் பெட்டியில் ஒரு தொகை வைத்து சிவாஜியிடம் நீட்டினார் எஸ்.வி.எஸ்.
காசு வேண்டாம் என்று சிவாஜி மறுத்துவிட்டார். உணர்ச்சி வசப்பட்டவர் அடுத்த பிறவியில் நாயாகப் பிறந்து சிவாஜிக்கு நன்றிக் கடன் கழிப்பேன் என்று பேட்டியளித்தார்.
காடாத்துணியில் தைத்த அரை டிராயருடன் திருப்பதி நடந்தே சென்று ஏழுமலையானிடம் சண்டை போட்டுத் திரும்புவார் .
நடிப்புத்தொழிலை விட்டு கொஞ்ச காலம் ரெட்ஹில்ஸை அடுத்த கரனோடையில் நிலம் வாங்கி கலப்பை பிடித்து உழுது விவசாயம் செய்தார். திடும் என்று ஒருநாள் மாரடைப்பால் புறப்பட்டுப் போய்விட்டார்.
சவக்குழிக்குள் சடலத்தை வைத்து மண்ணைத் தள்ளிய போது 'அப்பா மூஞ்சி மேல மண்ணைப் போடாதிங்க. அவருக்கு மூச்சு முட்டும்'- என்று அவரின் 6 வயது மகன் சரவணன் அழுதது இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது.