Feed Item
·
Added article

🌹 பம்பாய்க்கு நாடகம் நடத்த ஒருமுறை நான் போயிருந்தபோது தெருவில் எங்கள் குழுவினரோடு போய்க்கொண்டிருந்தேன்.

🌹அப்போது வழியில் சந்தித்த ஒரு வயதான கிழவி சொன்னார்.

தம்பி.. உன்னை எம்.சி.ஆர். நடிச்ச படங்கள்லே பாத்திருக்கேன்.. நல்லா நடிக்கிறே.. எனக்கு நீ ஒரு உதவி செய்யணுமே..

“என்னம்மா… சொல்லுங்க”.. - என்றேன்.

“🌹எம்.சி.ஆர். கிட்டே நான் விசாரிச்சேன்னு சொல்றீயா?”

அவருடைய பெயர், முகவரி எதையும் அவர் சொல்லவில்லை. அப்படியே போய்விட்டார். இந்த மாதிரியான ஈர்ப்பு சக்தி ஒரு நடிகருக்கு இருப்பதை உணர்ந்தபோது வியப்பாக இருந்தது.

அவரிடம் இயல்பாக இருந்த வள்ளல்

தன்மை அதற்கு ஒரு முக்கியமான காரணம்.

🌹 விளம்பரத்திற்காக அவர் அப்படிப் பண்ணுகிறார் என்று அவரைச் சிலர் விமர்சிப்பதைப் பார்த்திருக்கிறேன். விளம்பரத்திற்காக அவர் சில விஷயங்களைச் செய்திருக்கலாம். ஆனால் விளம்பரம் செய்துகொள்ளாமல், விளம்பர நோக்கம் இல்லாமல் அவர் பிறருக்குச் செய்த உதவிகள் ஏராளம்.

🌹யாராவது அவருக்கு முன்னாடி கஷ்டப்படுவதைப் பார்த்தால், உடனே உதவி பண்ணியிருக்கிறார். சினிமாவுலகில் அவருக்கு எதிராக இயங்கியவர்களுக்குக் கூட அவர் உதவியிருக்கிறார்.

🌹சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன் என்கிற நடிகருடைய தாயார் மறைந்தபோது அவர் போய் நின்ற இடம் எம்.ஜி.ஆரின் ராமாவரம் வீடு. அவரை அடையாளம் கண்டு விசாரித்த எம்.ஜி.ஆர். உடனே வீட்டில் இருந்தவர்களை அழைத்தார்.

“இவருக்கு ஒரு வேலைக் கொடுத்திருங்க. தேவைப்படுகிற பணத்தைக் கொடுத்திருங்க” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

🌹அந்த முதிர்ந்த நடிகரான வெங்கட்ராமன் பிறகு சொன்னார். “வீட்டிலே அடுப்பில் உலையை வைச்சுட்டு ராமாவரம் தோட்டத்துக்குப் போனா கண்டிப்பா உலை பொங்கும்”.

🌹இதெல்லாம் நான்கு பேருக்குத் தெரியவேண்டும் என்பதற்காகச் செய்கிற காரியங்கள் இல்லை. எனக்குத் தெரிந்து அவரிடம் உதவி பெற்றவர்கள் பலர். அதெல்லாம் வெளியே தெரிய வந்ததில்லை.

“🌹ஒருமுறை அவுட்டோர் ஷூட்டிங்கிற்காக காரில் எம்.ஜி.ஆருடன் போய்க் கொண்டிருந்தோம். நல்ல வெயில் நேரம். யாரோ ஒரு அம்மாள் காலில் செருப்பில்லாமல் போவதைப் பார்த்துவிட்டு, என்ன நினைத்தாரோ, அந்தக் கால்களின் சூட்டைத் தான் உணர்ந்த மாதிரி, சட்டென்று தன்னுடைய காலில் போட்டிருந்த செருப்புகளைக் கழட்டி அந்த அம்மாவிடம் கொடுத்துவிட்டார்.

🌹எம்.ஜி.ஆர். கூட இருந்த டிரைவருக்கும், எங்களுக்கும் தான் இது தெரியும். அவரிடம் வந்து யாரும் கேட்கவில்லை. இருந்தபோதும் தானாகச் செய்தார்” என்று எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான ஒருவர் என்னிடம் சொல்லியிருக்கிறார்..

🌹அவரிடமிருந்த ஏதோ ஒரு குணம் அவரை அப்படிச் செயல்பட வைத்திருக்கிறது. இது மிகையில்லை. அவருடைய இயல்பு.எம்.ஜி.ஆருக்கு இருந்த இளகிய சுபாவத்துக்கு உதாரணமாக நான் பார்த்தவரையில் எத்தனையோ நிகழ்ச்சிகளைச் சொல்லலாம்.

🌹வெளியூர்களில் ‘ஷூட்டிங்’ நடக்கும்போது டெக்னீஷியன்கள் உட்படப் பலருக்கு போடப்படும் சாப்பாட்டை அந்த இடத்துக்குப் போய் சாப்பிட்டுப் பார்ப்பார். அவர் சம்பந்தப்பட்ட ஷூட்டிங்கில் எப்போது வேண்டுமானாலும் இப்படி அவர் சோதிப்பது நடக்கும் என்பதால் படக்குழுவினர் அனைவருக்கும் வழங்கப்படும் சாப்பாடும் தரமாகவும், சுவையாகவும் இருக்கும்.

-நடிகர் சோ

  • 57