எதிர்க்கட்சிகளின் அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில், கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டியா ஃப்ரீலண்ட் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நாளைய தினம் விலகுவதாக அறிவித்துள்ளார்.
எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இந்த வெள்ளிக்கிழமை முதல் துறக்க உள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகருக்கு இன்று எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக சமூக ஊடக பதிவொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டிலிருந்து கனடாவின் நாடாளுமன்றத்தில் தனது தொகுதி மக்களுக்கும், கனடிய மக்களுக்கும் சேவை செய்தது மிகப் பெரிய பெருமை என ஃப்ரீலண்ட் குறிப்பிட்டுள்ளார்.
திங்கட்கிழமை, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, பொருளாதார வளர்ச்சி தொடர்பான ஆலோசகராக ஃப்ரீலண்டை நியமித்துள்ளதாக அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, உக்ரைனின் மறுசீரமைப்பு தொடர்பான கனடாவின் சிறப்பு பிரதிநிதி பதவியிலிருந்து அவர் விலகுவதாக அறிவித்ததுடன், “வரும் வாரங்களில்” நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக தெரிவித்திருந்தார்.
ஆனால், வெளிநாட்டு அரசாங்கத்துக்கான ஆலோசகர் பதவியை ஏற்றுக்கொண்ட உடனேயே அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளும், ஒழுக்க நெறி விமர்சகர்களும் கேள்வி எழுப்பினர்.
