இயக்குநர் சுந்தர்.சி-க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவரது பிறந்தநாளில் நடிகையும் அவரின் மனைவியுமான குஷ்பூ தகவல் தெரிவித்தார். அவருக்கு என்ன ஆனது?
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சுந்தர்.சி. பல வெற்றிப்படங்களை இயக்கிய இவர் அண்மையில் கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த்தை இயக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் ஒப்பந்தமான சில நாட்களிலேயே விலகிய அவர், ரஜினி படத்தை இயக்கப்போவதில்லை என்றும் அதற்காக ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
தற்போது விஷாலை வைத்து ஒரு படமும், நயன்தாரா முன்னணி நாயகியாக வைத்து மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தையும் சுந்தர் சி இயக்கி வருகிறார். இன்று சுந்தர் சியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் மனைவியும் நடிகையுமான குஷ்பூ திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
விஐபி பிரேக் தரிசனம் மூலம் வழிபட்ட குஷ்புவுக்கு, தேவஸ்தான நிர்வாகம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. சாமி கும்பிட்ட பின் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்ட நிலையில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.
தொடர்ந்து கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய குஷ்பு, இன்று என்னுடைய கணவர் சுந்தர் சி பிறந்தநாள். சிறிய அறுவை சிகிச்சை அவருக்கு மேற்கொள்ளப்பட்டிருப்பதால் அவரால் வர இயலவில்லை. எனவே நான் குடும்ப உறுப்பினர்களுடன் வந்து ஏழுமலையானை வழிபட்டேன் என்று அப்போது கூறினார். ஆனால் அவருக்கு என்ன அறுவை சிகிச்சை என்ற விவரங்களை குஷ்பூ தெரிவிக்கவில்லை.
இதனிடையே, சுந்தர் சியின் பிறந்தநாளையொட்டி வீடியோ வெளியிட்டு அவரது அவ்னி மீடியா நிறுவனம், மூன்று தசாப்தங்களாகத் தொடர்ச்சியாக பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்து வரும் பொழுதுபோக்கின் மன்னர் என்று புகழ்ந்துள்ளது.
ஆம்பள, ஆக்சன் படங்களைத் தொடர்ந்து விஷால், ஹிப் ஆப் தமிழா, சுந்தர் சி இணையும் படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
