Feed Item
·
Added a post

இந்தக் காலத்தில் இப்படியும் சில டாக்டர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

டாக்டர் கோபி. அவரது மனைவி டாக்டர் ஹேமப்பிரியா.

மதுரையில் மருத்துவமனை வைத்திருக்கிறார்கள்.

நம்பவே முடியாத ஒரு மாபெரும் மருத்துவ சேவையை இந்த டாக்டர் தம்பதிகள் இருவரும் இணைந்து செய்து வருகிறார்கள்.

இருதய அறுவை சிகிச்சை தேவைப்படும் ஏழைக் குழந்தைகள் எங்கிருந்தாலும் தேடிப் பிடித்து,

முழுக்க முழுக்க இலவசமாகவே அவர்களுக்கு சிகிச்சை செய்து குணப்படுத்தி வருகிறார்களாம்.

"இவர்களுக்கு சொந்த ஊர் மதுரைதானா ?"

"டாக்டர் ஹேமப்பிரியாவுக்கு மதுரைதான். ஆனால் டாக்டர் கோபிக்கு சேலத்துக்குப் பக்கத்தில ஒரு சின்ன கிராமம்."

"இதற்குப் பின்னணியில் ஏதாவது ஒரு காரணம் இருக்க வேண்டுமே ! எதனால் ஆரம்பித்தார்கள் இப்படி ஒரு வித்தியாசமான சேவையை ?" காரணம் இருக்கிறது.

சேலத்தில் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கோபி, குழந்தைகளுக்கான இருதய அறுவை சிகிச்சையில் சிறப்பு மருத்துவம் படித்தவர்.

கஷ்டப்பட்ட குடும்பம்தான். அரசாங்கம் கொடுத்த கல்வி உதவித் தொகையிலும், அப்பா வாங்கிக் கொடுத்த கடன் தொகையிலும்தான் டாக்டருக்கு படித்து முடித்திருக்கிறார் இந்த கோபி.

மருத்துவக்கல்லூரியில் படிக்கும்போதே உடன் படித்த மாணவி ஹேமப்பிரியாவோடு பழக்கமும் நெருக்கமும் ஏற்பட ...

கோபியின் இரக்ககுணம் ஹேமாவை ஈர்த்திருக்கிறது. இருவரையும் கல்யாணத்தில் இணைத்திருக்கிறது.

மருத்துவ படிப்பை முடித்த பின்...

சென்னை பெங்களூர் ஹைதராபாத் எல்லா இடங்களிலும் உள்ள தனியார் மருத்துவ மனைகளில் டாக்டராக பணிபுரிந்து கை நிறைய சம்பாதித்து வந்திருக்கிறார் டாக்டர் கோபி.

ஆனால் அவர் வாழ்க்கையில் எதிர்பாராத ஒரு திருப்பம் ஏற்பட்டது. சதீஷ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணி புரியும்போதுதான். அங்கேதான் ஒரு ஆறு வயது சிறுமியை, தன் எதிர்காலத்தையே மாற்றி அமைக்கப் போகும் ஒரு குழந்தையைச் சந்தித்தார் டாக்டர் கோபி.

அந்தச் சிறுமியின் இதயத்தில் ஏதோ ஒரு இனம் தெரியாத கோளாறு. அது முற்றிய நிலையில் மூச்சுத் திணறி அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்க...

அவசரம் அவசரமாக டாக்டர் கோபியிடம் அவளை அழைத்து வந்தார் அவளது அம்மா.

கோபி கேட்டார்: "எப்போதிலிருந்து அம்மா இந்தப் பிரச்சனை இருக்கிறது?" அந்த அம்மா அழுதுகொண்டே, "இவ பிறந்து ஆறு மாதத்திலேயே ஆஸ்பத்திரியில கண்டுபிடிச்சுட்டாங்க டாக்டர். அப்பவே ஆபரேஷன் பண்ணணும்னு சொன்னாங்க."

டாக்டர் கோபி கொஞ்சம் கோபத்துடன்தான் கேட்டார். "அப்புறம் ஏம்மா உடனடியா அறுவை சிகிச்சை பண்ணல ?"

அந்த அம்மாக்காரி கண்ணீர் வடித்தபடி பதில் சொன்னாள்: "ஆபரேஷன் பண்ண நிறைய செலவாகும்னு சொன்னாங்க. அந்த அளவிற்கு பணம் எங்ககிட்ட இல்லை டாக்டர்."

டாக்டர் கோபி எதுவும் பேசாமல் அந்த குழந்தையின் மருத்துவ ரிப்போர்ட்களை திரும்பத்திரும்ப பார்த்தார். அந்த அறிக்கைகளின்படி, நோய் கண்டு பிடிக்கப்பட்ட ஆறாவது மாதத்திலேயே, அவள் குழந்தையாக இருக்கும்போதே தாமதம் செய்யாமல் உடனடியாக அறுவை சிகிச்சை செய்திருந்தால் அவள் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்.

ஆனால் இப்போது...

பிரச்சினை எல்லை மீறி எல்லாமே கை நழுவிப் போய் விட்ட இந்த நிலையில்... எந்த ஒரு சிகிச்சையும் கை கொடுக்கப் போவது இல்லை. என்ன முயற்சி செய்தாலும் அந்த சிறுமியை காப்பாற்ற வழியேதும் இல்லை. மனமுடைந்து போனார் டாக்டர் கோபி. அன்றிரவு வெகுநேரம் தூங்காமல் விழித்திருந்தார்.

"என்னங்க ஆச்சு, ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க ?"என்று மனைவி கேட்க,

"ஒன்றுமில்லை ஹேமா.

எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை.

எந்தப் பாவமும் செய்யாத அந்த ஆறு வயது குழந்தை வெகுவிரைவில் நம் கண் முன்னாலேயே இறந்து போகப் போகிறதே, இதற்கெல்லாம் யார் காரணம் அல்லது எது காரணம் ?"

கணவன் சொன்னதைக் கேட்ட அந்த நொடியே ஹேமாவின் தூக்கமும் தொலைந்து போனது.

அன்று இரவு முழுவதும் தூங்காமல் விடிய விடிய இது பற்றி நிறைய பேசினார்கள்.

உரிய காலத்தில் சிகிச்சை கொடுக்காததால் உயிரை இழக்கப் போகும் அந்த ஆறு வயது சிறுமி மட்டும் அல்ல. ஆண்டுதோறும் நம் நாட்டில் பல குழந்தைகள் இப்படித்தான் பரிதாபமாக உயிரை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சரியான நேரத்தில் இதயத்தில் ஏற்பட்டிருக்கும் கோளாறை கண்டுபிடிக்க முடியாதது ஒரு காரணம். அப்படியே கண்டு பிடித்தாலும் சிகிச்சை செய்ய தேவையான மருத்துவ வசதிகளும் பணவசதியும் இல்லாதது இன்னொரு முக்கியமான காரணம்.

இதன் காரணமாக ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான பச்சிளம் குழந்தைகளின் பரிதாப மரணம்.

'இதற்கெல்லாம் என்னதான் தீர்வு' என்று கேட்டார் ஹேமா.

கோபி அமைதியாகப் பதில் சொன்னார். "இதற்கான தீர்வுக்கு நாம்தான் முயற்சி எடுக்க வேண்டும்."

"என்ன சொல்கிறீர்கள் கோபி ?"

"ஆமாம் ஹேமா. நாம் தனி ஆளாக நின்று இந்த காரியத்தைச் சாதிக்க முடியாது. இதற்காக ஒரு ஃபவுண்டேஷன் உருவாக்க வேண்டும்."

"இந்த சதீஷ்கர் ஊரிலா ?"

"இல்லை. இது நமக்கு புது இடம். நமக்குத் தேவையான ஒத்துழைப்பு அவ்வளவு சீக்கிரத்தில் இங்கு கிடைத்து விடாது. இதை நமக்கு நன்கு தெரிந்த இடத்தில் ஆரம்பிப்பதுதான் நல்லது."

இப்படித்தான் மதுரையில் உதயமானது லிட்டில் மொபெட் ஹார்ட் ஃபவுண்டேஷன்.

( little moppet heart foundation)

எதற்காக சென்னை போன்ற பெருநகரங்களை விட்டுவிட்டு மதுரையை தனது சேவைக்கான இடமாக டாக்டர் கோபி தேர்வு செய்தார்?

"அதற்குக் காரணம் இருக்கிறது மதுரையை சுற்றி நிறைய சின்ன சின்ன கிராமங்கள் இருக்கின்றன. இங்கே உள்ள மருத்துவமனைகளில் மருத்துவ வசதிகள் அவ்வளவு திருப்திகரமாக இல்லை.

இந்த கிராமத்து மக்களுக்கு சிகிச்சைக்கு செலவழிக்க போதுமான பணமும் கையில் இல்லை. இவை எல்லாவற்றிற்கும் மேலாக

குழந்தைப் பருவத்தில் எளிதாகக் கண்டுபிடித்து குணப்படுத்தக்கூடிய ஒரு நோயை, ஆரம்ப கட்டத்திலேயே எப்படிக் கண்டு பிடிப்பது, அதற்கு என்ன சிகிச்சை செய்வது என்ற அடிப்படை மருத்துவ அறிவு இங்கே கொஞ்சம் கூட இல்லை. அதனால்தான் சென்னையை விட்டு விட்டு மதுரையை நாங்கள் தேர்ந்தெடுத்தோம்."

ஆரம்பித்த வேகத்திலேயே அடுத்தடுத்து ஏராளமான இடங்களில் இலவச மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்தினார் டாக்டர் கோபி.

மதுரை, தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, கோவில்பட்டி, திருநெல்வேலி, ராமநாதபுரம், பரமக்குடி போன்ற தென் மாவட்டங்களில் நடத்திய இந்த முகாம்களில், பிறவி இதயநோய் உள்ள ஏராளமான குழந்தைகளைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

மதுரையில் உள்ள தேவதாஸ் மருத்துவமனை, இந்த குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை செய்ய அத்தனை ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க...

இதுவரை நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சைகள் செய்து அந்த பச்சிளம் குழந்தைகளின் உயிரை பத்திரமாக காப்பாற்றியிருக்கிறார்கள். அனைத்துமே இலவசமாக.

"எல்லாமே இலவசம் என்பது சரி. நீங்கள் உங்கள் குடும்பத்தை எப்படி நடத்துகிறீர்கள் டாக்டர் கோபி ?"

சிரித்தபடி இதற்கு பதில் சொல்கிறார் அவரது மனைவி ஹேமா.

"பண வசதியில்லாத பரிதாப நிலையிலுள்ள குழந்தைகளுக்கு மட்டும்தான் இங்கே நாங்கள் இலவசமாக சிகிச்சை செய்கிறோம். பணம் இருக்கிறவர்கள் வெளியே உள்ள ஹாஸ்பிடல்களில் இருந்து கூப்பிட்டால், என் கணவர் ஆபரேஷன் செய்து விட்டு அதற்குரிய ஃபீஸ் வாங்கி கொண்டு வருவார்.

நானும் என் பங்குக்கு வீட்லயே குழந்தைகளுக்கான பேபி ஃபுட் தயார் செய்து ஆன்லைனில் அதை விற்பனை செய்கிறேன்.

எங்களுக்கும் எங்கள் இரு குழந்தைகளுக்கும் இது தாராளமாகப் போதும்."

சில நொடிகளின் அமைதிக்குப் பிறகு ஹேமா தொடர்ந்து சொல்கிறார்:

"நாங்கள் இருவரும் வெளியிடங்களுக்குச் சென்று பிராக்டீஸ் செய்தால் கண்டிப்பாக இதைவிட பலமடங்கு பணத்தை சம்பாதிக்கலாம். ஆனால் இந்த ஏழை குழந்தைகளுக்கு நாங்கள் கொடுக்கும் இலவச சிகிச்சையினால், அந்த குழந்தைகளின் முகங்களிலும் அவர்கள் பெற்றோரின் முகங்களிலும் காணப்படும் திருப்தியையும் நிறைவையும் எத்தனை கோடிகள் கொடுத்தாலும் நாம் பார்க்க முடியாது."

டாக்டர் கோபி, டாக்டர் ஹேமப்பிரியா, இருவருக்கும் நமது நல் வாழ்த்துகள்..!

ஏராளமான இணைய தளங்களில் தேடி எடுத்த, டாக்டர் தம்பதியினரின் புகைப்படங்கள் இதோ.....

ஆனால் இப்படி ஒரு தன்னலமற்ற சேவையை இந்த டாக்டர் தம்பதியினர் ஆரம்பிக்க மூல காரணமாக இருந்த அந்த ஆறு வயதுக் குழந்தை... அவள் புகைப்படத்தை எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை. சரி. அதனால் என்ன ? உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு தேவதையின் படத்தை, அந்த குழந்தையின் படத்துக்கு பதிலாக நினைத்துக் கொள்ளுங்கள். அந்த தேவதைதான் இந்த டாக்டர் தம்பதிகளின் மனமாற்றத்திற்கும் மருத்துவ சேவைக்கும் காரணம்.

  • 612