ஒரு காலத்தில் ஆசிரியராக பணியாற்றியவர் அதன் பிறகு சினிமாவில் இணைந்து பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் நடித்து தென்னிந்திய சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியிருக்கிறார். அவர் தான் நடிகை அனுஷ்கா ஷெட்டி. தமிழ், தெலுங்கில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர். ரஜினி, விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி ஆகியோருடன் தமிழிலும், நாகார்ஜுனா, பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா போன்ற நட்சத்திர ஹீரோக்களுடன் தெலுங்கிலும் நடித்துள்ளார்.
தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான ‘ரெண்டு’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அனுஷ்கா, வேட்டைக்காரன், சிங்கம், தெய்வத்திருமகள், வானம், லிங்கா என பல படங்களில் நடித்துள்ளார். ‘அருந்ததி’ திரைப்படம் அனுஷ்காவுக்கு பரவலான அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது என்றாலும், 2015-ல் வெளியான ‘பாகுபலி’ திரைப்படம் பான் இந்தியா ஸ்டார் என்ற அங்கீகாரத்தை அனுஷ்காவுக்கு கொடுத்தது.
எந்த நடிகையும் அவ்வளவு எளிதில் செய்ய துணியாத துணிச்சலான முடிவை எடுத்தார் அனுஷ்கா. ‘பாகுபலி’ வெற்றிக்குப் பிறகு அனுஷ்கா நடிப்பில் ‘இஞ்சி இடுப்பழகி’ திரைப்படம் வெளியானது. அதுவரை ஹீரோக்கள் உடல் எடைகளை கூட்டி, குறைத்து நடித்து வந்த நிலையில் ஹீரோயின் ஒருவர் உடல் எடையை பெருமளவில் கூட்டியிருந்தார். மேலும், பருமனான உடல்வாகு கொண்ட பெண்களுக்கு ஆதரவாகவும், அவர்களின் வலியை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் அனுஷ்கா மிளிர்ந்தார்.
உண்மையில் அனுஷ்காவின் இந்த துணிச்சலான முடிவு வரவேற்பை பெற்றது என்றாலும், அதன் பிறகு அவரது சினிமா வாய்ப்புகள் குறையத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. அடுத்து ‘பாகுபலி 2’ அனுஷ்கா நடித்த படங்களில் அதிக வசூலை ஈட்டிய படமாக முத்திரை பதித்தது. அண்மையில் அனுஷ்கா நடிப்பில் ‘Ghaati’ திரைப்படம் வெளியானது.
40 வயதிலும் தொடர்ந்து முன்னணி நடிகையாக நடித்து வரும் அனுஷ்கா, சினிமாவில் நுழைவதற்கு முன்பு, பெங்களூருவில் உள்ள ஈஸ்ட்வுட் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். இந்த தகவல் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அங்கு அவர் யோகா ஆசிரியராக பணியாற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படமும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுவரை தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் கவனம் செலுத்தி வந்த நடிகை அனுஷ்கா மலையாளத்தில் நடிகையாக அறிமுகமாகிறார். அவர் நடிப்பில் மலையாளத்தில் ‘Kathanar: The Wild Sorcerer’ என்ற மலையாள திரைப்படம் உருவாகி வருகிறது. அனுஷ்கா அடுத்தடுத்த அழுத்தமான கதைகளை கொண்ட படங்களில் தேர்வு செய்து நடிப்பேன் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.