Feed Item
·
Added article

“செத்து செத்து விளையாடுவோமா” என்ற ஒரே வசனம் மூலம் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தவர் தான் காமெடி நடிகர் முத்துக்காளை. இவர் 1965-ம் ஆண்டு பிறந்தவர், இவருடைய சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சங்கப்பட்டி. சிறுவயதில் இருந்தே தற்காப்பு கலைகளில் ஒன்றான கராத்தேவில் தேர்ச்சி பெற்ற இவர், ­பிளாக் பெல்ட் வாங்கினார்.

பின்னர் ஒரு ஸ்டண்ட் கலைஞராக திரையுலகில் தன்னுடைய பயணத்தை துவங்கி, ஒரு சில படங்களில் காமெடி ரோலில் தலைகாட்டினார். இவருடைய தனித்துவமான நடிப்பு மற்றும் உடல்மொழி காரணமாக, வடிவேலுவுடன் பல படங்களில் பணியாற்றும் வாய்ப்பை பெற்றார். குடி பழக்கத்தால் தன்னுடைய வாழ்க்கையை சீரழித்து கொண்டிருந்த இவரை, அதில் இருந்து மீட்டு கொண்டுவந்தது கூட வடிவேலுவின் அறிவுரைகள் தான். இதனை பலமுறை தன்னுடைய பேட்டிகளில் முத்துக்காளை கூறியுள்ளார்.

படிக்க வேண்டும் என்கிற வைராக்கியத்தோடு, 40 வயதுக்கு மேல் டிஸ்டன்ஸ் எஜிகேஷன் மூலம் படிக்க துவங்கி, தன்னுடைய 58-ஆவது வயதில் சுமார் மூன்று முதுகலை பட்டங்களை பெற்றுள்ளார். இவருக்கு சமீப காலமாக திரைப்படங்களில் நடிக்க அதிகப்படியான வாய்ப்புகள் கிடைத்த போதும், சிறிய வேடத்தில் நடித்தாலும், மக்கள் மத்தியில் அந்த கதாபாத்திரம் பேசும் படி இருக்க வேண்டும் என்பதால், தன்னை தேடி வரும் வாய்ப்புகளை நிராகரித்து வருவதாகவும் கூறினார்.

நடிப்பை தாண்டி பிஸ்னஸில் கவனம் செலுத்தி வரும் முத்துக்காளை, தன்னுடைய ஒரே மகனையும் நன்கு படிக்க வைக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்துள்ளார். 12-ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற இவருடைய மகனுக்கு, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தன்னுடைய வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு அளித்தது மட்டும் இன்றி, படிப்புக்கு தேவையான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் முத்துக்காளை, ஆனந்த கண்ணீரோடு ரசிகர்களிடம் ஒரு முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது ஒரு சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது பலரின் கனவு. அப்படிப்பட்ட இவரின் பலவருட கனவு தற்போது நிறைவேறி உள்ளதாம். மிகவும் கஷ்டப்பட்டு தன்னுடைய சொந்த ஊரான ராஜபாளையம் அருகே உள்ள சங்கம்பட்டியில், சொந்த வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்துள்ளாராம். இதே போல் சென்னையில் ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது தன்னுடைய கனவு என்றும், அது உங்கள் அனைவரின் ஆசியோடு நிறைவேறும் என்றும் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து ரசிகர்கள் பலரும், முத்துக்காளைக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

  • 751