ஆசியாவின் மிக வயதான யானையான 'வத்சலா', மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் நேற்று (08) உயிரிழந்தது. அந்த யானைக்கு 100 வயதுக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
ஆசியாவின் மிகவும் வயதான பெண் யானையான ‘வத்சலா’ பல ஆண்டுகளாக, பன்னா புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அடையாளமாக இருந்தது. மிகவும் வயதான யானையாக இருந்ததால், அது காப்பகத்தில் உள்ள மற்ற யானைகள் குழு அனைத்தையும் வழிநடத்தியது.
வத்சலா யானையின் முன் கால்களின் நகங்களில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக, காப்புக்காட்டின் ஹினௌடா பகுதியில் உள்ள கைரையன் வடிகால் அருகே எழுந்து நடக்க இயலாமல் படுத்துக் கொண்டது.
வனத்துறை ஊழியர்கள் இந்த யானையை தூக்க நிறைய முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் வத்சலா யானை செவ்வாய்க்கிழமை (08) பிற்பகலில் உயிரிழந்தது.
இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக, சமீப காலமாக இந்த யானை பார்வையை இழந்ததால், அதனால் நீண்ட தூரம் நடக்க முடியவில்லை என புலிகள் காப்பகம் தெரிவித்தது.