Feed Item
·
Added article

”எம்.ஜி.ஆர் எதைச் செய்தாலும், அதில் வேகமும் விடாமுயற்சியும் இருக்கும்!”

சிகிச்சை முடிந்து எம்.ஜி.ஆர். தமிழகம் திரும்புகிறார் என்று செய்தி வருகிறது.

ஆம்புலன்சில் படுத்த படுக்கையாக வரப்போகிறாரா இல்லை சக்கர நாற்காலியில் வரப்போகிறாரா என்று சொந்தக் கட்சிக்காரர்கள் மத்தியிலேயே குழப்பம்.

யாருக்கும் எந்த விவரமும் தெரியவில்லை. அவரை விமானத்தில் இருந்து அப்படியே தூக்கி கீழே வைக்கும் ஒரு ஸ்பெஷல் லிப்ட் கூட தயார் நிலையில் இருந்தது.

புரட்சித் தலைவரை சுமந்து வந்த அமெரிக்க விமானம் சென்னையில் தரை தொட்டது. மந்திரிகள் முதல் கடைக்கோடி தொண்டன் வரை தங்கள் மன்னவனைக் காண தவம் கிடந்தனர்.

ஓடுபாதையில் மெல்ல ஊர்ந்து வந்து நின்றது அந்த விமானம். பயணிகள் எல்லோரும் வெளியேறிய பிறகு சில நிமிடங்கள் உருண்டோடின. முதலில் டாக்டர்கள் வெளியே வர, பின்னால் தெரிந்தது அந்த ரோஜா முகம். காத்திருந்த அத்தனை கண்களிலும் கண்ணீர்.

விமானத்தில் இருந்து வெளிப்பட்டதும், அங்கு கூடியிருந்தவர்களைக் கண்டு உற்சாகமானார். கையை உயர்த்திக் காட்டிவிட்டு, விறுவிறுவென படிக்கட்டுகளில் அவர் இறங்கி வந்த வேகத்தைக் கண்டு தமிழகமே ஆர்பரித்தது. அவரது எதிரிகள் அரண்டு போனார்கள்.

அப்போது எம்.ஜி.ஆருக்கு வலது கை செயலிழந்து இருந்தது. அவ்வப்போது சின்ன பேப்பர் ரோலை கையில் வைத்து அழுத்தியபடி அந்தக் கைக்கு வேலை கொடுக்க கொடுக்க மீண்டும் கைகள் செயல்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறியிருந்தனர் மருத்துவர்கள்.

சின்ன பேப்பர் ரோல் எதுக்கு? நான் பெரிய பேப்பர் பந்தா உருட்டி அதிலேயே பயிற்சி எடுக்கிறேன் என்று சொல்லி, தினமும் பயிற்சி செய்வார். தொடர்ச்சியான பயிற்சியால் விரைவிலேயே அவரது கை செயல்படத் தொடங்கியது.

அந்தச் சமயத்தில் எம்.ஜி.ஆருக்கு வைத்தியம் பார்த்த டாக்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாராட்டு விழா ஒன்று நடத்தப்பட்டது. அந்த விழாவில் கானு என்ற டாக்டருக்கு தங்க யானை பொம்மை ஒன்றை பரிசளித்தார் எம்.ஜி.ஆர்.

விழாவின்போது, “இப்போது டாக்டர் கானு அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்” என்றதும், பின் வரிசையில் அமர்ந்திருந்த டாக்டர் எழுந்து நடந்து சென்று மேடை ஏறி எம்.ஜி.ஆரை நெருங்கும் வரை நல்ல எடை கொண்ட அந்த யானை சிலையை தன் வலது கையால் தூக்கிப் பிடித்தபடியே நின்றிருந்தார் தலைவர்.

அருகில் நின்றிருந்தவர்கள் பதறிப்போய் பிடிக்க முயல, யாரையும் நெருங்க அவர் அனுமதிக்கவில்லை. டாக்டர் கானு அருகே வந்ததும், “எப்படி…” என்பதைப் போல ஒரு சிரிப்பு சிரித்தபடி அந்தப் பரிசை அவர் கையில் கொடுத்தார்.

அதைப் பார்த்து வெளிநாட்டு டாக்டர்களே வியந்து போனார்கள். இது தான் புரட்சித் தலைவரின் மன திடம். அவர் எதை செய்தாலும் அதில் இந்த வேகமும் விடாமுயற்சியும் இருக்கும்.

அமெரிக்காவில் அவர் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில், இங்கே இந்திராகாந்தி சுடப்பட்டு உயிரிழந்தார். இந்தச் செய்தியை சொன்னால் அது அவரது உடல் நலத்தை பாதிக்கும் என்பதால் அப்போது அதை எம்.ஜி.ஆரிடம் சொல்லவில்லை.

நான்கைந்து நாட்கள் கழித்து மெதுவாக அந்தச் செய்தியை சொன்னபோது, “ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லவில்லை” என்று கடுமையாகக் கோபித்துக் கொண்டாராம்.

சரியான நேரத்தில் அமெரிக்க சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து தன் உயிரைக் காப்பாற்றிய இந்திராவின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் கதறி அழுதிருக்கிறார். அன்று முழுவதும் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல் பட்டினி கிடந்திருக்கிறார் எம்.ஜி.ஆர். அந்த அளவுக்கு இந்திராவின் இழப்பு அவரைக் கடுமையாக பாதித்தது.

1987-ம் ஆண்டு ஜூன் மாதம் நடிகர் சத்யராஜின் ரெண்டு தங்கச்சிகளுக்கு கோயமுத்தூர்ல கல்யாணம். ஒரு மரியாதைக்காக ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆரை சந்திச்சு பத்திரிகை கொடுத்தார்.

‘‘அண்ணே… காலையில 4.30 – 5.30 ஒரு மூகூர்த்தம், 5.30 – 6.30 ஒரு முகூர்த்தம். நீங்க ரெண்டாவது முகூர்த்தத்துக்கு வந்தா போதும்னு சொல்லி இருக்கார். ‘‘ஏன் முதல் முகூர்த்தத்துக்கு வரக்கூடாதா? நான் 4 மணிக்கே வந்திடறேன்’’னு சொல்லிட்டார்.

சத்யராஜூக்கு ஒன்ணும் புரியல. ‘‘எண்ணன்ணே, மரியாதைக்காக கூப்பிட்டேன், தலைவர் கண்டிப்பா வர்றேன்னு சொல்லிட்டார். எப்படி அவரை ரிசீவ் பண்றது’’னு பதட்டமாகிட்டார்.

‘‘நீ விடுய்யா… அவர் தமிழ்நாட்டு சி.எம். அவர் வந்து போற வரைக்கும் அதிகாரிங்க பார்த்துப்பாங்க’’னு சொன்னேன்.

கல்யாணத்துக்கு எம்.ஜி.ஆர். போன அதே பயணிகள் விமானத்துல தான் நானும் போனேன். அவருக்கு ரெண்டு சீட் பின்னால நான் உட்கார்ந்துகிட்டு இருந்தேன். தலைவருக்கு இந்தப் பக்கம் வின்டோ சீட்ல ஜானகி அம்மாவும், வலது பக்கம் அமைச்சர் முத்துசாமியும் உட்கார்ந்துட்டு இருந்தாங்க.

என்னைப் பார்த்த முத்துசாமி, முன்னாடி வாங்கனு சொல்லி எழுந்து இடம் கொடுத்தார். புரட்சித் தலைவரை வணங்கிவிட்டு அவர் அருகில் அமர்ந்தேன். அப்போது அவருக்கு பேச்சு சரியாக வராத நேரம். என்னைப் பார்த்து சிரித்தார்.

“நீங்க எங்க ஆளு. நீங்க ஏன் அரசியலுக்கு போனீங்க?” என்று கேட்டேன்.

“ம்… ஏன்?” என்றார்.

“முன்னாடியெல்லாம் உங்கள பார்க்கணும்னா நேரா தோட்டத்துக்கு வந்து உரிமையோட உங்க அறைக்கே வந்து சந்திப்போம். இப்பல்லாம், 4 பி.ஏ.வை தாண்டி உங்களைச் சந்திக்கிறது அவ்வளவு சுலபமா இல்லியே.

நான் ‘இனி ஒரு சுதந்திரம்’னு ஒரு படம் எடுத்திருக்கேன். அதைப் பார்க்க உங்களை அழைக்கலாம்னு முயற்சி பண்ணிட்டு இருக்கேன், முடியல” என்றேன். சிரித்தபடி ஏதோ சொன்னார். புரியவில்லை. ஜானகி அம்மாவை பார்த்தார்.

“ 9 ஆம் தேதி டெல்லி போறேன். திரும்பி வந்ததும், ஒரு நாள் வந்து படத்தைப் பார்க்கிறேன்னு சொல்றார்” என்றார் ஜானகி அம்மையார்.

கல்யாணத்து அன்று காலை 2.30 மணிக்கே எழுந்து தயாராகி 4.30 மணிக்கு மண்டபத்துக்கு வந்துவிட்டார். அன்றைக்கு அவருக்கு இருந்த உடல்நிலைக்கு இப்படியெல்லாம் தன்னை வருத்திக் கொண்டு வரவேண்டும் என்று அவசியமே இல்லை. ஆனால் மனதில் ஒன்றை நினைத்துவிட்டால் அதை செய்தே தீருவார் எம்.ஜி.ஆர்.

கல்யாணத்துக்கு வந்தவர் இரண்டு முகூர்த்தத்துக்கும் இருந்தார். கோயமுத்தூர்காரங்க சாப்பாட்டு விஷயத்துல பின்னிடுவாங்க. காலை டிபனில் நெய் மிதக்க மிதக்க சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், 4 வடை என்று அவர் இலையை நிரப்பி விட்டனர்.

தலைவர் அமர்ந்து சாப்பிட்ட டேபிளுக்கு எதிரிலேயே நின்று கொண்டிருந்த அவரது டாக்டர், சர்க்கரை பொங்கலையும் வெண் பொங்கலையும் காட்டி வேண்டாம் என்பது போல சைகை செய்தார்.

லேசாக நிமிர்ந்து டாக்டரைப் பார்த்தார், “இத்தனை பேர் முன்னாடி என்னை வியாதிக்காரன்னு சொல்லிக் காட்றியா…” என்ற எக்ஸ்பிரஷனோட, “இன்னும் கொஞ்சம் சர்க்கரைப் பொங்கல் வைப்பா… இன்னும் ரெண்டு வடை வைப்பா” என்று ஆசையாக கேட்டு வாங்கி சாப்பிட்டார் தலைவர்.

எந்த இடத்திலுமே தன்னை அவர் பலகீனமாக வெளிப்படுத்திக் கொள்ளவே மாட்டார். உடலில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் பொதுமக்கள் மத்தியில் எப்போதுமே ஒரு ஹீரோவாக இருந்தவர். இந்தத் திருமணத்துக்கு பிறகு டெல்லிக்குச் சென்று வந்தார். அதன் பிறகு ஒரு சில மாதங்களிலேயே நம்மையெல்லாம் விட்டு பிரிந்து விட்டார்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு எம்.ஜி.ஆர். ஒன்றரை வருடங்கள் வரை வாழ்வார் என்று டாக்டர்கள் சொன்னபோதும், நான்கரை வருடங்கள் வாழ்ந்து மறைந்தார் அந்த உத்தமத் தலைவன்.

  • 1215