நடிகர் சூர்யா, மற்றும் கார்த்தி குடும்பத்தினரின் அகரம் பவுண்டேஷன் விழா சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில், அகரம் பவுண்டேஷன் மூலமாகப் படித்து, தற்போது ஒரு நல்ல நிலையில் இருக்கும் ஒரு பெண் பேசிய பேச்சு, அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. குறிப்பாக, அப்பெண் பேசியதைக் கேட்டு நடிகர் சிவகுமார் தலைகுனிந்து சிரித்தது, இணையத்தில் வைரலாகி வருகிறது.
விழாவில் பேசிய அப்பெண், தன்னுடைய சொந்த கிராமம் மற்றும் அங்கு நிலவிய மோசமான சூழ்நிலை குறித்துப் பேசினார். "எங்கள் ஊருக்குச் சரியான சாலை வசதி கிடையாது, மருத்துவ வசதி கிடையாது. நாங்கள் ஒரு காட்டுக்குள்தான் வசித்தோம். ஆனால் நன்றாகப் படித்துக்கொண்டிருந்தேன். தொடர்ந்து படிப்பதற்கு என் குடும்பத்தில் சரியான சூழ்நிலை இல்லை.
அப்போதுதான் என் ஆசிரியர், 'நீ அகரம் பவுண்டேஷன் மூலமாக முயற்சி பண்ணு' என்று ஒரு நம்பர் கொடுத்தாங்க," என்று கூறினார்.
"அந்த நம்பருக்குப் போன் பண்ணுவதற்குக்கூட எங்கள் ஊரில் டவர் கிடையாது. இந்த பக்கம் அந்த பக்கம் என்று அலைந்து ஒரு இடத்தில் எனக்கு டவர் கிடைத்தது. அங்கிருந்து போன் பண்ணி தகவலைச் சொன்னேன். அதன்பிறகு எனக்கு அகரம் மூலம் ஒரு போன் வந்தது. அதுதான் என் வாழ்க்கையை மாற்றியது.
அதுவரைக்கும் நான் தமிழ் மீடியத்தில் படித்திருந்தேன். நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும், சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் எனக்கு இன்ஜினியரிங் படிப்பதற்காக சீட் கிடைத்தது," என்று கூறினார்.
கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, அப்பெண்ணுக்கு குஜராத்தில் வேலை கிடைத்திருக்கிறது. இது குறித்து அவர் பேசுகையில், "குஜராத்துக்குப் போவதற்காக முதல்முறை நான் பிளைட்டில் போனேன். எனக்கு அதற்கு முன்பு பிளைட்டில் எப்படி ஏற வேண்டும், சீட் பெல்ட் எப்படிப் போட வேண்டும் என்று எந்த விஷயமும் தெரியாது.
ஏர்போர்ட்டில் நான் நின்று கொண்டிருக்கும்போதுதான் அங்கு சிவகுமார் சாரும், அவருடைய மனைவி லட்சுமி அம்மாவும் வந்தாங்க. அவங்கதான் எனக்கு ஏர்போர்ட்டில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், சீட் பெல்ட் எப்படிப் போட வேண்டும் என்று எல்லாமே சொல்லி தந்தாங்க," என்று கூறினார்.
மாணவி இதைச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, சிவகுமார், "ஐயோ, இதையெல்லாம் சொல்லுகிறாளே," என்று சிரித்தபடியே தலையில் கை வைத்து முகத்தை மூடிக்கொண்டார். அவருடைய இந்த எதார்த்தமான செயல், பலரையும் கவர்ந்துள்ளது.
அந்தப் பெண் இப்போது நல்ல நிலையில் இருப்பதாகவும், அதற்கு அகரம் பவுண்டேஷனும், சிவகுமார் குடும்பத்தினரின் ஆதரவுமே காரணம் என்றும் கூறினார்.
இந்த விழாவில் பேசிய நடிகர் சூர்யா, "அகரம் மூலம் மாணவர்கள் நல்ல நிலைமைக்கு வந்து, மற்றவர்களுக்கும் உதவ வேண்டும்," என்று தனது பெருமையைப் பகிர்ந்துகொண்டார். கார்த்தி, தனது அண்ணி ஜோதிகா மற்றும் அப்பா சிவகுமார் ஆகியோர் அகரம் பவுண்டேஷனுக்கு அளித்த ஆதரவு குறித்துப் பேசியிருந்தார்.
பொதுவாக, நடிகர் சிவகுமார் கோபக்காரர் என்றும், புகைப்படம் எடுக்கக்கூட அனுமதிப்பதில்லை என்றும் பேசப்பட்ட நிலையில், ஒரு மாணவிக்காக அவர் ஏர்போர்ட்டில் செய்த இந்த உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர். அகரம் பவுண்டேஷன், வெறும் நிதியுதவி மட்டும் அல்லாமல், மாணவர்களுக்கு ஒரு குடும்பமாகவும் செயல்பட்டு வருகிறது என்பதை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.