இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலாய்க்கா சித்ரே (24), அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியிலுள்ள டேடன் நகரில் வசித்து வந்தார். இவரும், நேபாளத்தைச் சேர்ந்த இவரது நண்பர் நவம்கவுலும் இங்குள்ள ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்துவிட்டு அமெரிக்காவிலேயே தங்கி வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இருவரும் லோயர் மன்ஹாட்டன் சப்வே ரயில் நிலையத்துக்கு சென்றுள்ளனர். ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது இருவரும் அந்த வழியே வந்த ரயில் மோதி அதே இடத்திலேயே இறந்தனர். பின்னர் அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
ரயில் தண்டவாளத்தில் நவம் கவுல் தவறி விழுந்ததாகவும், இதைப் பார்த்த மலாய்க்கா சித்ரே அவரைக் காப்பாற்றச் சென்று விபத்தில் சிக்கியதாகவும் நியூயார்க் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ரட்கர்ஸ் பல்கலைக் கழகத்திலுள்ள ரட்கர்ஸ் பிசினஸ் பள்ளியில் பட்டப்படிப்பை நவம் கவுல் முடித்துள்ளார். அதேபோல் மலாய்க்கா சித்ரே, ரட்கர்ஸ்-நியூ பிரன்ஸ்விக் கலை, அறிவியல் கல்லூரியில் இளம் அறிவியல் பட்டப்படிப்பை கடந்த 2024-ல் முடித்துள்ளார். அகாடியா பார்மசூடிக்கல்ஸ் நிறுவனத்தில் சித்ரே ஆபரேஷன்ஸ் ஸ்பெஷலிஸ்டாகவும், நவம் கவுல் புளூம்பெர்க் நிறுவனத்தில் டேட்டா அனலிஸ்டாகவும் வேலை பார்த்து வந்துள்ளனர்.