Feed Item
·
Added article

முடியவே முடியாது. இவனெல்லாம் நிச்சயமாக சினிமாவுக்கு வர வாய்ப்பே இல்லை."

ஒரு சிறுவனின் ஜாதகத்தை பார்த்து விட்டு, ஒரு ஜோதிடர் கணித்த கணிப்பு இது. "நான் சொல்வதை நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இவன் ஜாதகப்படி, திரை உலகத்துக்கும் இவனுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே கிடையாது."

இப்படி அந்த ஜோதிடர் சொன்னதைக் கேட்டு, அந்த சிறுவனின் தாய் கவலை அடைந்தார். ஏனென்றால் சினிமாவுக்கு போய் ஜெயித்துக் காட்டுவேன் என்று ஒற்றைக் காலில் நின்று அடம் பிடித்தான் அவருடைய மகன்.

ஜோதிடர் சொன்ன எதிர்மறையான கருத்தைக் கேட்டு அந்தப் பையன் வருத்தம் கொள்ளவில்லை; வைராக்கியம் கொண்டான்.

அந்த ஜோதிடரின் இடத்தில் வைத்தே அவரிடம் சவால் விட்டான்.

"ஜோதிடர் அய்யா, நல்லா கேட்டுக்கோங்க. உங்கள் ஜோதிடத்தை நான் பொய்யாக்கிக் காட்டுகிறேன். சினிமாவில் நிச்சயமாக ஜெயித்து காட்டுகிறேன். உங்கள் கணிப்பு தப்பு என்பதை கட்டாயம் நிரூபிப்பேன்."

புறப்பட்டுப் போனான். போராடினான்.

புதிய புதிய முயற்சிகள் செய்தான்.

ஜோதிடரிடம் சவால் விட்டுச் சொன்னதை வெகு சீக்கிரத்திலேயே நிறைவேற்றிக் காட்டினான்.

அந்தச் சிறுவன்தான் பின்னாளில் பின்னணி பாடல்களில் தனி முத்திரை பதித்த பி.பி. ஸ்ரீனிவாஸ். டிஎம்எஸ் கொடி உச்சத்தில் பறந்து கொண்டிருந்த காலத்திலேயே, தனக்கென்று ஒரு தனிக்கொடியை பறக்க விட்ட தனித்துவமான பாடகர்.

எத்தனை எத்தனை இனிய பாடல்கள் !

காலங்களில் அவள் வசந்தம்...

மயக்கமா கலக்கமா...

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...

ரோஜா மலரே ராஜகுமாரி...

நிலவே என்னிடம் நெருங்காதே...

'இனிமைக்கு இன்னொரு பெயர் பிபி ஸ்ரீநிவாஸ்' என்று எல்லோரையும் சொல்ல வைத்தார் பி பி ஸ்ரீநிவாஸ்.

சின்ன வயது ஜோதிடர் சம்பவம் பற்றி, பிற்காலத்தில் அவரிடம் கேட்டபோது, "ஜோதிடம் உண்மையோ பொய்யோ, எனக்கு தெரியாது. ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாகச் சொல்வேன்.

நாம் உண்ணும் ஒவ்வொரு தானியத்திலும் நம் பெயர் எழுதியிருந்தால்தான் நாம் சாப்பிட முடியும். அது போலத்தான் நான் பாடிய ஒவ்வொரு பாடலிலும் ஆண்டவன் என் பெயரை எழுதியிக்கிறான். அதில் எனக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது" என்று சொன்னார் பிபி ஸ்ரீநிவாஸ்.

அதனால்தான் ஏ எம் ராஜா பாட வேண்டிய 'காலங்களில் அவள் வசந்தம்' பாடலை சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பி பி ஸ்ரீநிவாஸ் பாட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்தப் பாடலை பாடிய பிறகு, அவரது புகழ் நினைத்தே பார்க்க முடியாத உயரத்திற்கு சென்றது.

'நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழக்கவில்லை...'

  • 45