2026ஆம் ஆண்டில் கனடா தனது குடியேற்ற விதிகளை மேலும் கடுமையாக்கி, புதிய நிரந்தர குடியிருப்பாளர்கள், சர்வதேச மாணவர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் எண்ணிக்கையை குறைக்க தீர்மானித்துள்ளது.
2024 இறுதியில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு, 2025 நவம்பரில் புதுப்பிக்கப்பட்ட இந்தக் கட்டுப்பாடுகள், வேலைவாய்ப்பு இழப்பு விகிதத்தை குறைப்பது, வீட்டு வசதி பிரச்சினையை சமாளிப்பது, சுகாதாரம் போன்ற பொது சேவைகளின் அழுத்தத்தை தணிப்பது என்பதே முக்கிய நோக்கமாகக் கொண்டவை.
எண்ணிக்கைகள் குறைக்கப்பட்டாலும், திறமையான தொழிலாளர்கள், பிரெஞ்சு மொழி அறிவுள்ளவர்கள் மற்றும் கனடாவில் முன் அனுபவம் உள்ளவர்கள் ஆகியோருக்கு இனி முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த கட்டுப்பாடுகள் மூலம் கனடாவுக்கு வருபவர்கள் பொருளாதாரத்தில் பயனுள்ளதாக பங்களிக்கக்கூடியவர்களாக இருப்பதை அரசு உறுதி செய்கிறது என கால்கரியைச் சேர்ந்த குடியேற்ற ஆலோசகர் மந்தீப் லிதர் தெரிவித்துள்ளார்.
கனடாவின் குடியேற்றக் கொள்கை இனி குறைந்த எண்ணிக்கையுடன், ஆனால் அதிகத் தேர்வுத்தன்மையுடன் முன்னேறுகிறது,” என தெரிவித்துள்ளார்.
நிரந்தர குடியிருப்பாளர்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைக்கப்பட்டு வரும் நிலையை அவதானிக்க முடிகின்றது. இதனால், உயர் கல்வித் தகுதி மற்றும் தொழில்முறை அனுபவம் கொண்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே அதிகம் தேர்வு செய்யப்படுவார்கள் என லிதர் கூறுகிறார்.