வரவிருக்கும் கேரள சட்டமன்றத் தேர்தலில் சிபிஎம் வேட்பாளராக நடிகை பாவனா போட்டியிடப் போவதாக வெளியான செய்திகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். இந்த வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டன, சில ஊடகங்களும் இது குறித்து செய்தி வெளியிட்டிருந்தன. தற்போது, தனது புதிய படமான 'அனோமி' வெளியீட்டிற்கு முன்னதாக, ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பாவனா இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தற்போது பாவனா, கதாநாயகியாக நடித்து, இணைத் தயாரிப்பாளராகவும் இருக்கும் 'அனோமி' திரைப்படம் ஜனவரி 30 அன்று வெளியாக உள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஆர். மரத் எழுதி இயக்கியுள்ளார். 'அனோமி' பாவனாவின் திரையுலகப் பயணத்தில் 90வது படமாகும். மர்ம, த்ரில்லர் படத்தில் பாவனா, தடயவியல் ஆய்வாளர் சாரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் ரஹ்மான், பினு பப்பு, விஷ்ணு அகஸ்தியா, அர்ஜுன் லால், ஷெபின் பென்சன், மற்றும் த்ரிஷ்யா ரகுநாத் ஆகியோர் நடித்துள்ளனர்.
சிரிப்புதான் வருது படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் முன் செய்தியாளர்களிடம் பேசினார் பாவனா, அப்போது செய்தியாளர் ஒருவர், கேரள சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடப்போவதாக பரவும் செய்து பற்றி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பாவனா, நான் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக வரும் செய்திகள் முற்றிலும் போலியானவை. இப்படி ஒரு செய்தி எப்படி வெளிவந்தது என்று எனக்குத் தெரியவில்லை. இதில், துளியும் உண்மையில்லை. அந்த செய்தியைப் பார்த்தபோது எனக்குச் சிரிப்புதான் வந்தது. அது ஒரு பெரிய நகைச்சுவை என்று பாவனா கூறியுள்ளார். நடிகை பாவனா கடந்த 2013ம் ஆண்டு கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்காகப் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
