ஒரு ஊர்ல ஒரு பெரிய மரத்தடியில ஞானி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்குப் பக்கத்துல ஒரு பசுவும், அதனோட சின்னக் கன்றும் மேய்ஞ்சுகிட்டு இருந்தன.
அப்போ அங்கே வந்த ஒரு இளைஞன் ஞானிகிட்ட, "ஐயா, வாழ்க்கையில விடுதலை அல்லது முக்தி பெற என்ன பண்ணனும்?" அப்படின்னு கேட்டான்.
ஞானி சிரிச்சுட்டே பக்கத்துல இருந்த கன்றைக் காட்டி, "இந்தக் கன்றுகுட்டியோட செயல்களைக் கொஞ்ச நேரம் கவனிப்பா" அப்படின்னு சொன்னார்.
அந்தக் கன்றுக்குட்டி தன்னிஷ்டப்படியெல்லாம் துள்ளித் குதிச்சது. ஓடிப்போய் மத்த மாடுகளை முட்டப் போச்சு, அப்புறம் வேலி ஓரமா இருந்த முட்புதருக்குள்ள தலையை நுழைச்சு மாட்டிக்கிச்சு. உடனே பயந்துபோய் "அம்மா, அம்மா"ன்னு கத்த ஆரம்பிச்சுது.
அதைக் கேட்ட பசு மாடு ஓடிவந்து, கன்றைப் பொறுமையா அந்த முட்புதர்ல இருந்து விலக்கி, தன் தாய்மையால அரவணைச்சுத் தேற்றியது. கொஞ்ச நேரம் தாய் மாட்டின் பக்கத்துல அமைதியா நின்ன கன்று, திரும்பவும் துள்ளிக் குதிச்சு ஓடி வேறொரு புதருக்குள்ள போய் மாட்டிக்கிட்டு மறுபடியும் கத்தத் தொடங்கியது.
இதைப் பார்த்த இளைஞன், "ஐயா, இந்தச் சின்ன கன்றுக்குட்டி திரும்பத் திரும்ப அதே தப்பைச் செய்து துன்பப்படுதே!" என்றான்.
ஞானி சொன்னார்:
"நமது மனமும் இந்தச் சின்னக் கன்றுக்குட்டி போலத்தான். எல்லை இல்லாத சுதந்திரம் இருக்குன்னு நினைச்சு, கண்ட கண்ட ஆசைகள், காம, குரோதங்கள் எனும் முட்புதருக்குள்ள போய் மாட்டிக்கிட்டுத் தவிக்குது. துன்பம் வரும்போது கடவுள்கிட்ட ஓடிவந்து கதறுது.
தாய் பசுவைப் போல இறைவனும் நம்மைத் தேற்றி காப்பாத்துறார். ஆனா, மனம் திரும்பவும் அதே தப்பைச் செய்து வேறொரு ஆசைப் புதருக்குள்ள போய் சிக்கிக்குது. கன்று எப்போ தன் தாயோட மடியை மட்டுமே சரணடைந்து, தாய் கூடவே அமைதியா நடக்குதோ, அப்போதான் அது ஆபத்துகள்ல இருந்து தப்பிச்சுப் பத்திரமா வாழும்.
அதேபோல, மனசு வெளிய உலகத்துல துள்ளி ஓடுறதை நிறுத்திவிட்டு, இறைவனின் திருவடிகளைச் சரணடையும் போதுதான் உண்மையான அமைதியும் விடுதலையும் கிடைக்கும்."
இளைஞன் தன் மனக் கட்டுப்பாட்டின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டான்.
நமது மனம் ஒரு கட்டுப்படாத கன்றுக்குட்டி போன்றது. அது ஆசைகள் என்னும் வேலிக்கு அப்பால் ஓடும் வரை துன்பப்பட்டுக்கொண்டேதான் இருக்கும். மனதை இறைவனிடமோ அல்லது நல்ல எண்ணங்களிலோ நிலைநிறுத்துவதே உண்மையான விடுதலை.